Saturday, December 5, 2009

வேரறுந்த மரங்கள்... (சிறுகதை)"எத்தனை கன்னு சார் எடுக்கப்போறோம்?"

"அம்பது கன்னு பாலு"

ஒரு மரம் நடும் விழாவிற்காக வேளச்சேரி நர்ஸரியிலிருந்து செடிகள் எடுக்க போய்க்கொண்டிருக்கிறோம்...நான் போயிருந்த பஸ்சின் டிரைவர்தான் பாலு.

பேருந்து பல நிறுத்தங்களை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை, அம்மா சொன்னது மட்டும் அடிக்கடி காதில் ஒலித்துக்கொண்டிருந்தது...

"படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது...உனக்கும் காலாகாலத்துல கல்யாணம் முடிக்கணும். உனக்கு கீழ ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க அவங்களுக்கு ஒரு கல்யாணங்காட்சி பண்ணனுங்கிறத மறந்திடாத ஆமா. இப்படி 'சேவை சேவை'னு சுத்திக்கிட்டிருந்தா என்னைக்கு வேலைக்குப்போறது...?"

என்ன செய்வது? வாழ்க்கையும் வயதும் ஓடிக்கொண்டிருக்கிறது...

"என்ன யோசனை சார்?" பாலு கேட்டதும் நினைவு வந்தது.

"ஒண்ணுல்ல பாலு. உங்களுக்கு நர்ஸரி இருக்கிற இடம் தெரியுமா?"

"தெரியும் சார். செக்போஸ்ட் முன்னால் இருக்கு சார்.பஸ் உள்ளே போகமுடியாது. வெளியிலிருந்துதான் எடுத்துக்கணும்."

கொஞ்சம் அமைதியானவர்,

"எந்த ஊர் சார் நீங்க?"

"நான் மதுரைப்பக்கம் பாலு...நீங்க..?"

"சிதம்பரம் சார். ரொம்ப நாளுக்கு முன்னாடியே சென்னைக்கு வந்தாச்சு. என் மச்சானும் இங்கதான் டிராவல்ஸ் வச்சிருக்கான்... ரெண்டு கார் இருக்குங்க சார். செம காசு சார்"

"பரவாயில்லையே... என்ன வச்சிருக்கார் குவாலிஸா?"

"இண்டிகா சார்...குவாலிஸுக்கு காசு கிடையாதுன்னான். சிக்கிரமே அதுவும் எடுத்துறுவான்."

சட்டென அமைதி நிலவியது.காரணம் நர்ஸரி வந்திருந்தது.

ஒரு சின்ன வாயிலோடு அது இருந்தது...ஒரு சின்ன கார் போகலாம்போலிருக்கிறது. ஆனால் பஸ் போக வாய்ப்பு இல்லை.

"நீங்க போய் பாத்துட்டிருங்க சார். நான் வண்டிய வாசல்ட்ட நிறுத்திட்டு வர்றேன்"

ஒரு ஒழுங்கோடு வரிசையாக எல்லா கன்றுகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நன்றாக வளர்ந்திருந்த மரங்கள் காற்றில் அசைந்து இருப்பை உணர்த்தின.

கூலியாள் ஓடிவந்தான், "என்னங்க வேணும்?"

"எங்களுக்கு 50 கன்னு மரம் நடுறதுக்காக வேணும்னு கேட்டிருந்தோம். இங்க வந்து எடுத்துக்கச்சொன்னாங்க. உங்க பேர்தான் சகாயம்ங்களா?"

"ஆமா சார். ஆபிஸர்ட்டருந்து ஆர்டர் வாங்கிருக்கீங்களா?" ஆர்டரைக் கொடுத்தவுடன், "வாங்க சார். எடுத்துத்தர்றேன்" என்று முன்னே நடந்தான் சகாயம்.

"நல்லா நிழல் தர்ற செடி தாப்பா"

"தர்றேன் சார். இதை பாருங்க?"

"பாலு இது நல்லா நெழல் தருமா பாருங்க"

"இது சவுக்கு கன்னு, வேணாம் சார் வேஸ்ட்டு. புங்கையோ வேப்பமரமோ இருந்தா பார்க்கலாம் சார். நல்ல நெழலும் தரும்,குளிர்ச்சியாவும் இருக்கும்...ஏங்க புங்கை வச்சிருக்கீங்களா"

"புங்கையெல்லாம் இருக்காதுங்க வேம்பு தர்றேன். நல்லா நெழல் கெடைக்கும்" என்றான் சகாயம்.

ஏதோ சிந்தனையிலிருந்த பாலு, "விலைக்குன்னா எவ்ளோ ஒரு கன்னு?"

"நுப்பது சார்.இப்போ இருக்குற ஆபிசரு கண்டிப்பானவரு சார். அதான் இல்லாட்டி நானே போட்டுக்கொடுத்துடுவேன். விலைக்கு எடுக்குறதாருந்தா சொல்லுங்க பண்ணிக்கொடுத்துர்றேன்"

"எனக்கு வேணும்பா. வேப்பங்கன்னு ஒண்ணு குடுத்துரு.முப்பது ரூபா தர்றேன்" பாலுவை ஆச்சரியமாக பார்த்தேன்.

"அது எங்கம்மாவுக்கு சார்...செடி வளக்குறதுனா அவ்ளோ உயிர் அவங்களுக்கு"

"அப்பிடியா. பரவாயில்லையே...ஆனா வேம்புதான் ரொம்ப சுலபமா கெடைக்குமே ஏன் காசு கொடுத்துவாங்கணும்?"

"ஒரு சின்ன சந்தோஷம்தான் சார்... வர்ற வருமானம் நமக்கே சரியா இருக்கு... வீட்டுக்கு எதுவும் அனுப்பமுடியல. அப்பப்போ இதமாதிரி ஏதாவது செஞ்சாதான் ஆறுதலா இருக்கு"

"இவ்ளோ தெளிவா சிந்திக்கிறீங்க...ஏன் சொந்தமா டிராவல்ஸ் வச்சுக்கக்கூடாது?"

"பண்ணணும் சார். ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு இருக்கேன். மொதல்ல நிறைய்ய கத்துக்கணும். பொறுப்பு எடுத்துக்கும்போது என்னன்ன சிக்கல் வரும்னு தெரியவேண்டாமா?"

ஒரு பெருமூச்சுடன் மேலும்,

"படிச்சிருந்தா உங்கள மாதிரி ஆபிசரா ஆகியிருந்திருக்கலாம். படிப்பு ஏறல. பாதிலயே கார் ஓட்ட வந்துட்டேன். படிப்பு ஒரு நிழல் மாதிரி சார். எப்பவும் கூடவே இருக்கும். என்னை நினைச்சுக்கிட்டா நிழல் இல்லாத மரம்தான் ஞாபகம் வருது. .."

சகாயம் ஓடி வந்தான்...

"சார் எல்லா செடியும் ஏத்தியாச்சு. இதுல ஒரு கையெழுத்து போட்டிருங்க"

"பாலு வண்டிய திருப்பிட்டு வாங்க"

தனது இருக்கையில் அமர்ந்த பாலு திரும்பிப்பார்த்தார்.

பஸ்சுக்குள் ஒரே செடி மயம். மண்வாசனை வேறு. புதிதாக பிறந்ததுபோன்ற ஒரு உணர்வு தோன்றியிருக்கவேண்டும்...

டிரைவர் பாலு, கிடைத்த ஒன்றிரண்டு இலை இடைவெளிகளில் முகம் காண்பித்து என்னை நோக்கி குழந்தைமாதிரி சிரித்தார்...

படிப்பு, நிழல் போல என்பது உண்மைதான். ஆனால் நம்பிக்கை மரத்திற்கு வேர் போன்று முக்கியமானது...

என்றாவது வெற்றியடைவேன் என்று சொல்லாமல் சொல்லிய அவர் சிரிப்பிலிருந்து, எனக்குள்ளும் ஒரு புதிய மனிதன் பிறந்திருந்தான்...

(மீள்பதிவு - நன்றி)

Photo Courtesy: freedigitalphotos

Saturday, November 28, 2009

இல்லாதவங்க இருந்தா என்ன, இல்லாட்டி தான் என்ன...


கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள்


”கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள் உலகத்துல எது அத்தான்? எங்க மாஸ்டர் கேட்டார்.. எங்க யாருக்கும் தெரியல” என்றாள் பத்தாம் வகுப்புக்கு போகும் கஸின்...

”ஒருவேளை, கலா மாஸ்டர் சுந்தரம் மாஸ்டர்-லாம் கெமிஸ்ட்ரியே இல்லை கெமிஸ்ட்ரியே இல்லை-ங்கிறாங்கில்லையா.  அதாயிருக்குமோனு சொன்னேன்.ஆனா அதுவும் இல்லையாம். அதான் உங்களை கேட்கச்சொன்னேன்..” என்றாள் என் மனைவியும்.


”கெமிஸ்ட்ரி இல்லாத பொருள் எதுவுமேயில்லை” என்றேன். அதேமாதிரி, பிஸிக்ஸ் இல்லாத பொருளும் உலகத்தில் இல்லை. ஒரு கல் சும்மா அசையாமல் இருத்தலும் ஒரு இயக்கமே எனறு படித்திருக்கிறோம் இல்லையா.

_________________________________________________________________________________


கொசு, கோழி, ஆடு - ஆவி ????


தெரியாமல்தான் கேட்கிறேன்.. மனிதனுக்கு மட்டும்தான் ஆவியா? மற்ற உயிரினங்களுக்குக்கிடையாதா? தினம் தினம் நூற்றுக்கணக்கில் கொசுக்களை கொன்று குவிக்கின்றோம்.. அதன் ஆன்மாவெல்லாம் உடனேவுடனே அமைதியாகிவிடுகின்றதா?


சிக்கன் மட்டனெல்லாம் ஒரு புடி புடிக்கிறோமே... அவற்றின் ஆவி எல்லாம் கசாப்புக்கடைக்காரனை ஒன்றும் செய்வதில்லையா..


சும்மா சும்மா யோசித்தால் இப்படியெல்லாம் தோன்றுகிறது.. விவரம் தெரிந்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்..ரொம்பநாட்களுக்குமுன் படித்த சிறுகதை(கதை: சுஜாதா ??) ஞாபகம் வருகிறது.. 


ஒரு பெண் திருமணமாகி புகுந்தவீடு போகிறாள். அவளோடு அந்த வீட்டில் வளர்ந்த வெள்ளைக்குதிரையும் சீதனமாக அனுப்பப்படுகிறது.. ஏதோ ஒரு கோபத்தில், அந்தக்குதிரையை கொன்றுவிட்டு, வேறு ஒரு பழுப்புக்குதிரை வாங்கிக்கொள்கிறான் கணவன். செத்த குதிரையின் ஆவி, இந்தப்பெண்ணுக்குள் புகுந்துகொள்ள பேசும்போதெல்லாம்,  அசாதாரணமாக குதிரைகணைப்புகளும் அவளிடமிருந்து வருகிறது.. புதிய ப்ழுப்புக்குதிரைக்கும் திடீரென கால்கள் வெள்ளையாக மாறிக்கொண்டேயிருக்கின்றது..


எதனால் இப்படி என்று பார்த்தால், அந்தபொல்லாத கணவனுக்கு கள்ளக்காதலிகள் தொடர்புண்டு. தன் எஜமானிக்கு துரோகம் செய்கிறானே என்ற கோபத்தில், பழைய குதிரை அந்தமாதிரி இடங்களுக்கு வர அடம்பிடித்ததால் அதனை கொன்றிருக்கின்றான். புதிய குதிரையும் தான் போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் போவதற்கு வருந்தியதால், அதன் கால்கள் வெள்ளையாக மாறியது..


இறுதியில், இவளுக்கு கணைப்பு அதிகமாகி உணவில் விஷம் வைத்து கணவனை கொல்வதாக கதை முடியும்.

_________________________________________________________________________________


”இல்லாதவங்க இருந்தா என்ன, இல்லாட்டி தான் என்ன...”


இந்தியன் படத்தில் வரும் ஒரு வசனம் இது.  ஏழைகளின் உயிர் எவ்வளவு சாதாரணமாக போய்விட்டிருக்கிறது பாருங்கள்? மனதை பாதித்த வசனம் இது.
_________________________________________________________________________________


 ஒரு புதிர்


3 லி. அளவு குவளை ஒன்றும், 5 லி. குவளை ஒன்றும் உங்களுக்கு தரப்படுகிறது. இவற்றை மட்டும் பயன்படுத்தி, சரியாக 4 லிட்டர் தண்ணீர் எடுக்கவேண்டும்.. வேறெந்த குவளையும் கிடையாது.. எப்படி??

_______________________________________________________________________________

Tuesday, November 17, 2009

தழுவாத கனவுகள்.. (ஒரு சிறிய கவிதை முயற்சி)

Inside a room with man on the opened door photo

ஓசையின்றி
நகர்கின்ற
நிகழ்கால
வாழ்க்கையை,
நனவாய் மாற
அடம்பிடிக்கும்
லட்சியங்களின்
முனகலுக்கிடையே,
இரவின்
தனிமையில்
யோசித்துப்பார்த்தால்,
நிசப்தத்தின்
சப்தம்
காதை அடைக்கிறது...

--o0o0o--

தேடுபொறிகள் (Search Engines) - இனி மெல்ல சாகும்... ????!!!!

'என்னது ??
நிஜமாவா...
பல்லுவெளக்காம கூட இருந்திருவேன்..
கூகிள்லாம இல்லாம, எப்படி கோடடிக்கிறதாம் ???'

--o0o--

ஆமாம்... புதிய கண்டுபிடிப்புகள் எளிமையாகயும், வசதியாகவும் இருந்துவிட்டால், பழையது மறக்கப்படுகிறது.. இது தொழில்நுட்பத்திற்கும் பொருந்தும்..

இடைக்காலத்தில், அறிமுகமான தேடுபொறிகள், நிஜமாகவே பொறி பறக்கச்செய்தன.. Clustering (வகைப்படுத்துதல்) , Semantic (பொருளுணர்ந்த தேடல்) ஆகிய தொழில்நுட்ப முயற்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன...

எத்தனை மேம்படுத்தினாலும், இந்த தேடுபொறிகள், ஏட்டுச்சுரக்காய்கள் போலத்தான் இருக்கின்றன... தகுந்த சீட்டை எடுத்துத்தந்து, 'நெல்' வாங்கிக்கொள்ளும் கிளிப்பிள்ளையைப்போல..

நிஜ வாழ்வில் எழுகிற எல்லா கேள்விகளுக்கும் விடைதரும் அளவிற்கு தேடுபொறிகள் முன்னேற்றமடையவில்லை என்பதுதான் பொதுவான கருத்து..

ஒரு உதாரணம்..

தன் வருங்கால மனைவிக்கு முகூர்த்தப்பட்டு வாங்க விரும்பிய ஒருத்தர், தேடுபொறிகளில் திரும்பதிரும்ப தேடி சோர்ந்து போய், ட்விட்டரில், 'பட்டு வாங்கவேண்டும்..' என்று ட்விட்டி (tweet) விடுகிறார்.. அவரை பின்தொடர்ந்த நன்மக்களிடமிருந்து, பல்வேறு ஆலோசனைகள்.. வழக்கம்போல 'தி.நகர் போங்கள்', 'ஈரோடு போங்கள்','காஞ்சி போங்கள்' இப்படி..

மற்றொரு பின் தொடரும் நண்பர், "பெரிய காஞ்சியின் சில இடங்களில், அசல் பட்டு குறைந்த விலையில் கிடைக்கிறது..என்னை அணுகுங்களேன்" என்று சரியாலோசனை சொல்கிறார்.. அவரை அணுகிய இவருக்கு சகாய விலையில் ஒரிஜினல் பட்டு வாங்க சாத்தியமாகிறது..இதைப்போல, பிற மனிதர்களின் (அனுபவத்) தகவல்கள் தான் நமது அன்றாட வாழ்க்கையில் உதவுகிறது என்பதால், சமூக இணைப்புத்தளங்கள்(Social Networking Sites), தேடுபொறிகளைவிட மென்மேலும் பிரபலமடையும் என கணிக்கப்படுகின்றன..

அதுமட்டுமின்றி, நமது கைப்பேசி ஒன்றே போதும் இதுபோன்ற தளங்களில் எப்பொழுதும் இணைந்திருக்க..!!! இதுவும் இத்தளங்கள் பிரபலமடைய முக்கிய காரணமாகின்றது..

ஆனால்...

கவனம், இம்மாதிரி தளங்களில் சுயதகவல்களை சொல்லாமல் இருப்பதும், தமது செயல்பாடுகளை வெளிப்படுத்தாமல் (உதா. ஊருக்குப்போறேன்,ரெண்டு நாளாகும், சாவியை ஜன்னலில்தான் வைத்திருப்பேன் ) இருப்பதும் உத்தமம்.. அதுவே குற்றங்களுக்கு வழிவகுக்காமல், தொழில்நுட்பத்தின் முழுப்பயனைடைய உதவும்.

பின்செய்தி:

நிறப்போர்...டிசைனர்கள் உஷார்:

'நிறவெறி'க்கான போர் இல்லைங்க.. சாதாரணமான 'நிற'த்திற்கான(Color) போர்தான் !!! எதிர்காலத்தில், கம்ப்யூட்டர் டிசைனர்கள் எல்லா நிறங்களையும் நினைத்தவுடனே பயன்படுத்தமுடியாது.. அவர்கள் பயன்படுத்த ஆசைப்படும் டிசைன்களில் வண்ணங்களை புகுத்தினால், காப்புரிமை பிரச்சனை பாயும்.. உதாரணத்திற்கு, ஆரஞ்சு வண்ணத்தை Orange என்ற செல்போன் சேவை நிறுவனம், காப்புரிமை பெற்றுவைத்திருக்கிறார்கள்.. இதேபோல, அடர்சிகப்பு - Coca Cola, மெஜெண்டா - T Mobile, இப்படி.. ( மேலும் படிக்க, இக்கடச்சூடு)

Wednesday, October 21, 2009

பாரதம் ஒரு பணக்கார நாடு தெரியுமா?

உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் நமது பாரதம் வளமான நாடாக ஒரு காலத்தில் இருந்தது.. அந்த வளங்களை பார்த்து ஆசைப்பட்டுதான் நமது நாட்டை கைப்பற்றி அடிமையாக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.. நம்மை ஆண்டபோது, நம்மிடம் இருந்து, அவர்கள் தங்கள் நாட்டிற்கு திருடிக்கொண்டுபோன செலவங்கள் மட்டுமே - பல ஆயிரம் பில்லியன் பவுண்டுகள் தாண்டும் எனப்படுகிறது.. கீழே உள்ள விஷயத்தை பாருங்கள்.. (தெளிவற்ற படத்திற்கு மன்னிக்கவும்)

Lord Macaulay

ஆதாரம்: மின்னஞ்சலில் வந்த ஒளிப்படம்.

Saturday, October 3, 2009

ஆஞ்சநேயரும் அர்ச்சுனரும்...(தெரிந்த கதை?)

தன் சகோதரர்கள்(கெளரவர்கள்) மேல், கொடிய அஸ்திரங்களைப் பிரயோகிக்க மனமின்றி, பாசுபத அஸ்திரத்தை தேடிக்கொண்டுவர கிளம்பினார் அர்ச்சுனன்.(பாசுபதம் சற்று மயக்கமுறச்செய்யும். அவ்வளவே)

போகிற வழியில் அனுமன் தவம் செய்துகொண்டிருப்பதைக்கண்டார்.

அவரிடம் நக்கலாக,"உங்கள் இராமர் பெரிய வில்லாளி ஆயிற்றே. தான் ஒரே ஆளாக அம்பெய்தே ஒரு பலமான பாலம் கட்டமுடியுமே.. ஏன் குரங்குப்படையை வைத்து கற்களால் கட்டினார்?"

அர்ச்சுனின் கர்வத்தை அடக்கவேண்டும் என்ற கோபம் அனுமனுக்கு உண்டாயிற்று.

"அம்பால் ஆன பலமான பாலத்தை இப்பொழுதே கட்டுக. என் கால்சுண்டுவிரல் பட்டதும் அது சுக்குநூறாகும்"

அர்ச்சுனனும் விடவில்லை. "அப்படிமட்டும் நடந்தால், இங்கேயே வேள்வி ஏற்படுத்தி அதில் என்னை மாய்த்துக்கொள்வேன்" என சூளுரைத்தார்.

"நானும் சொல்கிறேன். அவ்வாறின்றி நான் தோற்றால் உமது போர்க்கொடியில் இருந்துகொண்டு, என் வாழ்நாள் முழுவதும் உமக்கு அடிமையாக இருப்பேன் "

உடனே, நாணில் அம்புகள் பூட்டி எய்து, ஒரு பாலம் உருவாக்கினார் அர்ச்சுனன். எத்தனைகோடி பேரையும் தாங்கும் பலமான பாலமாக அது இருந்தது.

இப்பொழுது, அனுமனுடைய முறை.

"ஜெய்ராம்" என்று இராமனைத் தியானித்ததும் அவர் உருவம் வளரத்தொடங்கியது...
பேருருக்கொண்ட அனுமன் பாலத்தின் மீது கால்வைத்தார்.

அந்தோ...எது நடக்கக்கூடதோ, அது நடந்தேவிட்டது. அனுமனின் கால்பட்டதும் பாலம் சுக்குநூறாகிப்போனது...

அனுமன் வெற்றிக்களிப்பில் ஆடினார். ஒடினார். கூக்குரலிட்டார்..

அர்ச்சுனனுக்கு அதிர்ச்சி... தமது வில் திறமை பொய்த்துவிட்டதே என்ற துக்கம் தாங்கமுடியவில்லை. வேறுவழியின்றி வேள்வி வளர்க்கத்தொடங்கினார்.

"வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, ஓர் அற்பக்குரங்கிடம் பந்தயம்கட்டி உயிரை விடப்போகின்றேனே... என் அண்ணனின் நிலையையும், என் கடமையையும் மறந்து, கர்வத்தால் மதிமயங்கிப்போனேனே. கண்ணா, என் இறைவா என்ன செய்யப்போகிறேன்" என்று கலங்கினார்.

தீக்குள் அர்ச்சுனன் குதிக்கமுற்பட்டபோது,"என்ன பிரச்சினை இங்கே?" என்றொரு குரல் கேட்டது.

பார்த்தால் ஒரு அந்தணன் நின்றுகொண்டிருந்தான்(அது கண்ணன் தான் என்பதை சொல்ல தேவையில்லை)

பந்தயத்தைப்பற்றி சொன்னார் அர்ச்சுனன்.

"பந்தயம் என்றாலே நடுவர் ஒருவர் வேண்டும். நடுவர் இன்றி நீ எப்படி தோற்றதாக கருதப்படும்?இப்பொழுது நான் நடுவராக இருக்கிறேன். உங்கள் போட்டியை மீண்டும் தொடங்குங்கள்"

போட்டி மீண்டும் தொடங்கியது.

தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார் அர்ச்சுனன். கண்ணனை தியானித்துக்கொண்டே மீண்டும் அம்பெய்து ஒரு பலமான பாலம் கட்டினார்.

அனுமன் கவலையே படவில்லை.
தன் பலம்பற்றி தனக்கே தெரியாத சாபம் பெற்றிருந்த அனுமனுக்கு தன் வல்லமை புரிந்தவுடன் கர்வம் வந்திருந்தது...

"இதோ பார்...உன் பாலம் எப்படி நொறுங்கப்போகிறது பார்" என்றபடி பாலத்தின்மீது ஏறி நின்றார்...ஆடினார்...ஓடினார்...குதித்தார்...பாலம் மட்டும் அப்படியே இருந்தது...ஒன்றும் ஆகவில்லை.

"பார்த்தாயா என் மாமனின்(கண்ணன்) சக்தியை? உங்கள் இராமரால்கூட உம்மை காப்பாற்றமுடியவில்லையே" என்று கேலிசெய்தார் அர்ச்சுனன்.

"நிறுத்துக உமது கொக்கரித்தலை. எங்கள் இராமரைவிட உன் கண்ணன் அவ்வளவு பெருமைக்குரியவன் இல்லை"

"யார் பெரியவர் என்று நான் சொல்கிறேன்", திரும்பினால், விஷ்ணு நின்றார்...

"கர்வம் தோன்றும்போது நம் கடமையும் பொறுப்புகளும் மறந்துவிடுகின்றன...ஒரே பரம்பொருளின் இரு அவதாரங்கள்தான் இராமனும்,கண்ணனும்...அப்படியிருக்க இதில் யார் பெரியவன் என்பது அர்த்தமற்ற விவாதம். இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணரமறந்துவிட்டீர்கள்"

இருவரும் நெகிழ்ந்து போய் நின்றார்கள்...

”அதுவும் தவிர, அர்ஜூனனுக்கு பாரதப்போரில் அனுமனின் ஆசிர்வாதம் அவசியம் தேவை. அதற்காக அர்ஜூனனின் போர்க்கொடியில் இருந்துகொண்டு ஊக்கமளிக்கவேண்டுமென்பதலால், இந்த சிறு திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டது..”

“அப்படியே ஆகட்டும் பிரபோ..!!” என்றார் அனுமன்.

பிறகு அனுமன் தான் சொன்னபடி அர்ச்சுனன் போர்க்கொடியில் இருந்துகொண்டு தன் வாழ்நாள்மட்டும் சேவை செய்தார்.

(ஆஞ்சநேயர் புராணத்திலிருந்து) - இது ஒரு மீள்பதிவு சில மாற்றங்களுடன்.

Friday, September 25, 2009

சந்திரனில் தண்ணீர் Vs நிலா Real Estate.

சந்திரனில் தண்ணீர் கண்டுபிடித்ததை வைத்து ஏகப்பட்ட பரபரப்பு செய்திகள் நாளிதழ்களையும், வலைப்பக்கங்களையும் நிரப்புகின்றன.. ’விண் ஆராய்ச்சி, வீண் செலவு’ என்ற நிலைமைமாறி, இன்னும் உற்சாகமாக இயங்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..

விடுவார்களா துட்டு பார்ட்டிகள்?? இப்பொழுதே இடம் வாங்கிப்போடுகிறார்கள் நிலாவில் !!! ஒரு ஏக்கருக்கு $20 மட்டுமாம்!!! அமெரிக்காவில் இயங்கும் Lunar Embassy கடந்த 29 வருடங்களாக நிலவில் நிலம் விற்கிறார்களாம். மேலும் தகவல்களுக்கு, www.moonshop.com போங்க (ஆதாரம் - The Times of India - 30 Sep 2009)

இவர்கள் எல்லாம் ஒன்றை கவனிக்கவேண்டும்...

திரு. மாதவன் நாயர் அவர்களின் கூற்றுப்படி

‘சந்திரனில் தண்ணீர், தண்ணீர் வடிவத்தில் கிடையாது.. மற்ற கனிமங்களுடன் கலந்து தாதுப்பொருளாக உள்ளது.. குறிப்பாக, ஹைட்ராக்ஸிலுடன் சேர்ந்துதான் தண்ணீர் சந்திரனின் நிலத்தில் காணப்படுகின்றது..

சந்திராயன் 1 அனுப்பிய படங்களை பார்த்தால், துருவப்பகுதிகளில் மட்டும் தண்ணீர் படிமங்கள் இருப்பதாகத்தெரிகின்றது..

Chandrayan-1 NASA Lunar Water Picture

எதிர்காலத்தில் பூமியில் ஏற்படப்போகும் தண்ணீர் பற்றாக்குறை, வாகன எரிபொருள்(Hydrogen) ஆகியவற்றுக்கு backup ஆக சந்திரன் படிமங்களை பயன்படுத்திக்கொள்ளமுடியும்..’

காற்றுமண்டலம், பிராணவாயு இல்லாத இடத்தில் தண்ணீர் எப்படி வந்தது? சூரிய ஒளிதான் மூலகாரணம். சந்திரனின் நிலப்பரப்பில் பட்டு தண்ணீர் மூலக்கூறுகள் தோன்றுகின்றன.. தொடர்ந்து, அங்கே தண்ணீர் படிமங்கள் இருந்து கொண்டிருக்கக்காரணமும் அதுவே..

மற்றபடி,வாழ்வதற்கான எந்தவொரு அடிப்படையும் இல்லாத (அல்லது லாயக்கில்லாத) இடம் நிலா! ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு போனதே இன்னும் சர்ச்சையாகயிருக்கின்ற நேரத்தில், அங்கேயே வாழப்போவதற்கான முயற்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன..

முக்கியமாக, பிராணவாயு இல்லாமல் வாழ மனிதன் என்று பரிணாமமாற்றம் பெறுகின்றானோ அன்றுதான் நிலாவில் வாழ்வது சாத்தியமாகும்.

மனிதகுலத்தில், மின்சாரம் முக்கியக்கண்டுபிடிப்பு. பூமிக்கு இருப்பதுபோல, ஈர்ப்பு விசை நிலவில் இல்லாததால், வேகம் முதலான விசை கிடையாது.. அதனால், மின் தயாரிப்பு கடினமானதாக இருக்கும்.. மின் பாட்டரிகளையும் மாற்றாக பயன்படுத்துவது, பெரிய அளவில் இயலாதது..

ஒரு சிறிய கிராம (Lunar Village) அளவில் உருவாக்கவே கடுமையான முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் தேவைப்படும்..

அதுவரை நிலா, ”தெரியாத புதையல்” தான். அதுசரி.. விஞ்ஞானிகள் இதை பற்றியெல்லாம் சிந்திக்காமலா இருப்பார்கள்?

புவியிலேயே வாழத்தகுதியற்ற இடங்களாக துருவப்பகுதிகள் மாறிவருகிறது.. அதை மேம்படுத்த வழியிருக்கிறதா?? பூமிப்பரப்பில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், கடல் பரப்பிலோ, கடலடியிலோ வீடுகட்டி வாழ்வது போல ஏதாவது கண்டுபிடித்தால் தேவலை !!!

மேலும் கருத்துக்களை இங்கே தரவும்.

Image Source Courtesy: NASA

Thursday, August 20, 2009

பேய்க்கதை (யார் பேய் கண்டுபிடியுங்கள்)

அந்த பூங்காவில் மனித நடமாட்டம் குறைவாக இருந்தது..

அந்த கடுமையான வெயிலுக்கும் குளுமையாக இருந்த புங்கை மரத்தடியிலிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில்.. ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தார்கள்

Photobucket

”என்னாச்சு ரமேஷ்.. வீட்டுக்கு போனீங்களா?” என்று கேட்டாள் பெண். ரமேஷ் மறுத்தலாக தலையாட்டினான்..

”ஹும்..எல்லாம் முடிஞ்சிடுச்சு.. அங்க போய் என்னாகப்போகுது,கவிதா.. உங்களுக்கு என்னாச்சு..”

ஒரு மெல்லிய தென்றல் காற்று அவள் தலைமுடியை கலைத்து சென்றது..

“எனக்கும் அதேதான், ரமேஷ்.. அவங்க மூஞ்சியிலேயே முழிக்கப்பிடிக்கல.. இங்கேயேதான் இருந்தேன்.. “

அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சிற்கு ஒரு ஜோடி வந்தது.. நெருக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்..

ரமேஷ் குலுங்கி குலுங்கி அழுதான்.. கவிதா தேற்ற முயன்றாள்.. “ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..” அவள் கண்களிலும் நீர்..

”ஹெல்லோ பிள்ளைங்களா.. எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகக்குரல் கேட்டு இருவரும் நிமிர்ந்தார்கள்..

ரங்கநாதன் தாத்தாவும், அவர் மனைவியும் வந்துகொண்டிருந்தார்கள்..

”ஏன் கண்ணீர்? ஓ.. பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சா.. “ என்றவாறு அருகில் வந்தார்கள்..

”ம்..விடுங்கப்பா.. நான், இவ எல்லாம் வயசானவங்க.. உடம்பு சரியில்லாமதான் இருந்தோம்.. ஆனா, எங்களோட ஒப்பிட்டு பார்க்கையில உங்க ரெண்டுபேரு நிலைமையும் ரொம்ப மோசம்-னு இவதான் அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பா.. கவலைப்படாதீங்க கண்ணுங்களா.. எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டிருக்கான்.. ” என்றபடி கடந்து சென்றார்..

* * * * *
ஒரு அழைப்பு..

கூட்டுமுயற்சியில் உருவான விக்கிப்பீடியா களஞ்சியத்தொகுப்பு மற்றும், “And, now.." போல, எத்தனையோ collaborative writing பிரபலமடைகிறது.

அதேபோல, இந்தக்கதையை இன்னும் வளர்க்கப்பிடித்தால், மேலும் எழுத வேண்டுகிறேன்.. அதாவது, collaborative story writing - க்கு அழைப்பு விடுக்கின்றேன்..
அதாவது, குழுவாக இணைந்து, ஒரு கதையை எழுதலாம். ஒரு சின்ன முயற்சிதான்..

மறவாமல் இந்தக்கதைக்கு லின்க் கொடுத்துவிடவும்..
நன்றி..


* * * * *

Friday, August 14, 2009

Crowdsourcing - ஆன்லைனில் சம்பாதிங்க - ஆர்வகுழுக்கள் !!!

எதிர்காலத்தில், டாக்டர், வக்கீல், ஆடிட்டர்கள் போல, கணினி வல்லுனர்களும் தனியாகவோ (அல்லது குழுவாகவோ) ஒரு அறை மட்டுமே எடுத்து, 'இங்கு ஆர்டரின் பேரில் தரமான மென்பொருள் செய்து தருகிறோம்' என போர்டு போட்டுக்கொண்டு, பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பணிபுரிவதற்கான காலம் வரும்..

காரணம் - Crowdsourcing !!!

சமீபகாலமாக, இணையத்தில் மெல்ல மெல்ல பரவலாக பாவிக்கப்படும் இந்த உத்திதான், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்போகும் விஷயமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது..

Crowdsourcing - அப்படீன்னா என்ன?

ஒரு கம்பெனிக்கோ, ஒரு தனிமனிதருக்கோ ஒரு வேலை/பணி செய்யவேண்டியதிருக்கிறது. என்ன செய்வார்? காசிருந்தால் outsource செய்வார்.. ஆனால், 'செய்யவேண்டிய பணி, பெரிய பணி... அதற்கு நிறைய பேர் வேண்டும், சிறந்த தரத்துடன் வெளியீடுகள்(solutions) வேண்டும்' என்று தோணினால், crowdsource செய்வார்..

அதாவது, பொது ஊடகங்களில், இந்த பணி(problem/task) பற்றி தண்டோரா போட்டு அறிவித்துவிடுவார்.. சிறு சிறு குழுக்களாக தங்களை அறிவித்துக்கொள்கிற மென்பொருள் நிபுணர்கள் அல்லது டிசைனர்கள், தங்களுக்கு ஆர்வமுள்ள சில பணிகளை எடுத்துசெய்து தீர்வுகள்(solutions) காண்பார்கள்.. எத்தனை தீர்வுகள் வருகி்ன்றதோ, அத்தனையும், பிற்பாடு Task அறிவித்தவருக்கே சொந்தமாகிறது.. அவர் அதை அப்படியே பயன்படுத்திகொள்ளலாம்.. மாற்றமும் செய்யலாம்.. (இன்னாருடைய தீர்வை பயன்படுத்துகிறோம் என்று சொல்லிவிடுவார்கள்) பின் ஒரு திட்ட மேலாளர் போல செயல்பட்டு ஒருங்கிணைப்பார்கள்...

பெரும்பாலான சமயங்களில், பணியை எடுத்து செய்பவர்களுக்கு முழுவிவரங்களும் தெரிய வாய்ப்பில்லாமல் போவதுண்டு .. உதாரணத்திற்கு, 10000 சென்ட்கள் [#12]. சுமாராக, 5 மாதத்தில், 51 நாடுகளிலிருந்து, 10000 ஓவியர்கள் ஒரு ஒரு புள்ளி மட்டுமே வைத்து வரைந்த ஓவியம். வரைந்து முடித்துபின் மேலாளர் ஒருங்கிணைத்து அறிவித்தபின்னரே தாங்கள் இதற்காகத்தான் பணிபுரிந்திருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியவந்தது..

பணி எடுத்து செய்பவர்களுக்கு என்ன($) தருவார்கள்???

பெரும்பாலானவர்கள் இந்த பணிக்கு இவ்வளவு தருவோம் என்று சொல்லிவிடுவார்கள்.. இதற்காக சில தளங்களும் உண்டு.. (தகவல் சற்று கீழே). பணிக்கு ஊதியமாக, பணம் தராமல், சான்றிதழ்கள், அன்பளிப்புகள் தரலாம்.. இன்னும் சிலர், "தங்களுடைய விடா முயற்சியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டி எங்கள் கம்பெனி அளிக்கக்கூடிய ஒரு அதிசயப்பொருள் இந்த சோப்பு டப்பா" - என்ற அதிர்ச்சியையும் தருவார்கள்.. இணையத்தில் இவ்வாறான 'சோப்பு டப்பா அன்பளிப்பு' கம்பெனிகள் நிறைய இருக்கிறார்கள் என்பது தெரிந்த செய்திதான்!!! ஆனாலும், இந்த (வெறும்) பாராட்டுக்களையும்கூட தங்களுடைய ரெஸியூமில் அள்ளிப்போட்டுக்கொண்டு போகிறவர்களும் இருக்கிறார்கள்..அது அவர்களுடைய Career Development-ற்கு உதவக்கூடுமாம்..

வீக்கிப்பீடியா போன்ற தகவல் களஞ்சியங்கள்,கூகிள் எர்த், ஆன்லைன் குழுமங்கள், forum-கள், ப்ளாக்குகள்,யூ-ட்யூப், ட்விட்டர், லொட்டு லொசுக்கு..ஏன் ஒரு விளையாட்டு[#11] கூட உள்ளது.. இப்படி எல்லாமே crowdsourcing-ன் சாயல்களே... என்ன, இவற்றுக்கெல்லாம் பைசா கிடையாது.. தபால்தலை சேகரிப்பவர்கள், காசுக்காகவா செய்கிறார்கள்.. அதுபோலத்தான் இதுவும்!

காசு தரக்கூடிய வலைதளங்களும் உண்டு.. உதாரணத்திற்கு, குரு[#1], 99டிசைன்ஸ்[#2], இன்னொசென்டிவ்[#3], எம்-டர்க்[#4], ஆகியன..

அழகழகாக டீசர்ட் டிசைன் செய்து அல்லது பஞ்ச் வாசகங்கள் பதித்து சம்பாதிக்க ஆசையா.. (சினிமா பஞ்ச் கூடவே கூடாது) இப்படிப்பட்டவர்களுக்கானதுதான் இந்த த்ரெட்லெஸ்[#5]. நல்ல டிசைன்கள், வாசகங்களுக்கு வாக்களித்தாலும் பரிசுகள் உண்டு.. இங்கே முக்கியப்பணிகள் எல்லாவற்றையும் open call-ல் அறிவிக்கிறார்கள்.. (New Update:டீ-சர்ட் டிசைன் பற்றி கற்றுகொள்வதற்கான தளங்களின் விவரங்கள் கீழே [#14])

நிறுவனங்கள், அமைப்புகள்,(நம்மூரில் கழகங்கள், குழந்தைகள் போல) ஆகியவற்றுக்கு நல்ல நல்ல பெயர்களை வைக்கவும், சிறந்தவற்றுக்கு வாக்களிக்கவும் அழைப்பு விடப்படுகின்றது.. [#7]. பெயர்சூட்டலுக்கும், வாக்களிப்புக்கும் பரிசு.

Crowdsourcing - ஒரு வரப்பிரசாதமா??

குழப்பம்தரும் கேள்வி.. சின்னச்சின்ன பணிகளுக்கு, தரமான தீர்வுகளை வேண்டும் என நினைக்கும் சிறு நிறுவனங்களுக்கு, இது வரப்பிரசாதம்தான்..

பெரும் வர்த்தகப்பணிகளை பிரித்துத்தருவது மற்றும் ரகசியம் காக்கப்படவேண்டிய(confidential) பணிகள் ஆகியவைகளை crowdsource பண்ணுவது உசிதமல்ல.. Outsourcing-கில், ஒப்படைத்த பணி தாமதமானால், 'ஏய்யா லேட்டு?' என்று கேட்கலாம்.. Crowdsourcing-கில், அது முடியாது.. அவர்களாக பார்த்து முடித்துத்தந்தால்தான் ஆச்சு.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் தருவார்கள்.. முடிக்காமல் விடவும் சாத்தியம் அதிகம்..ஏனெனில்,இங்கே சேவை கால ஒப்பந்தம்(SLA) கிடையாது..

இன்னொருபக்கம், பணியை எடுத்துக்கொண்டு சன்மானம் தராமல் ஏமாற்றுகிற ஆன்லைன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதை இதன் பிரபலத்திற்கு பின்னடைவாக கருதலாம்..


பணிகள் பற்றிய அறிவிப்புகள் இந்த தளங்களில்:

1) குரு
2) 99டிசைன்ஸ்
3) இன்னோசென்டிவ்
4) எம்-டர்க்
5) டீசர்ட் டிசைனிங்,டீசர்ட்டில் வாசகங்கள், வாக்களிப்புகளுக்கு பரிசுகள்
6) என் ஐடியா
7) பேரு வக்ய எங்களுக்கு உதவுங்கள்

மேலும் படிங்க இங்கே,

8) வேறு சில பணிவாய்ப்புகள்
9) 135 சிறு தொழில்களின் தொகுப்பு(சி.தொ. வடிவமாகவே, crowdsourcing பார்க்கப்படுகிறது...கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒன்று)
10) பணி அறிவிக்கும் ப்ளாக்
11) Game with a purposeக்கு, ஒரு நல்ல உதாரணம்
12) 10000 சென்ட்கள்
13) எங்களுக்கு ஐடியா சொல்லுங்க
14) டீ-சர்ட் டிசைன் கற்றுகொள்ள (New Update)

ஆதாரம்:
* அவுட்சோர்ஸிங் அவ்ளோதானா?!!
* வீக்கிப்பீடியா
* பத்தாயிரம் சென்ட்கள்
* தி ஹிண்டு.
* ஆனந்த விகடன்.
* * * * * * * * * * * *

இன்றைய ஆச்சர்யம்: சேலத்தில், விபத்தில் சிக்கி, கோமாவிலிருந்த ஒரு சிறுபிள்ளையை, சுயநினைவுக்கு மீட்டெடுக்க உதவியாக இருந்தது - வடிவேலுவின் காமெடிக்காட்சிகளே! (நன்றி: குமுதம்)

Sunday, July 26, 2009

"ச்சூச்சூ" - மறு சுழற்சியில் - "ஆஹா"

தலைப்பை பார்த்தவுடன், பள்ளிக்கூட அறிவியல் கண்காட்சி ஞாபகத்துக்கு வந்தால், நான் பொருப்பில்லை.. :)

ஆனால், "fill up one tank and empty another. US chemists have combined refuelling your car and relieving yourself by creating a new catalyst that can extract hydrogen from urine.." (#முழு தகவலும் இங்கே) என்று குறும்போடு சொல்லும்போது, என்ன சொல்லவருகிறார்கள் என வாசிக்கத்தோன்றியது..

ஆமாம். மனிதனின் சிறுநீரிலிருந்து, எதிர்காலத்தில் ஹைட்ரஜன் கார்களுக்கு, எரிபொருள் தயாரிக்கமுடியும் என சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்..

எப்படி..??!!!

சாதாரணமாக, ஹைட்ரஜன் கார்களுக்குத் தேவையான ஹைட்ரஜன் அணுக்களை நீரிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். சாதாரண நீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் என்று பள்ளிக்கூட பாடத்தில் படித்திருப்போம்.. அதை கொஞ்சம் சிரமப்பட்டுதான் பிரித்து எடுக்கிறார்கள்.. ஏனெனில், ஹைட்ரஜன் அணுக்கள், நீரின் மூலக்கூறுகளில் இருகிய பிணைப்புடன்(tightly bonded) இடம்பெற்றுள்ளது..

இதற்கு நேர்மாறாக, யூரியா மூலக்கூறுகளில், நான்கு ஹை. அணுக்கள் சற்று இலகிய பிணைப்புடன்(less tightly bonded) இடம்பெற்றுள்ளது.. அதனால், பிரித்து எடுப்பதும் சுலபம்..

நீரின் மூலக்கூறிலிருந்து இரண்டு ஹை. அணுக்களை பெயர்க்கத்தேவையான மின்னளவு 1.23V என்றால், யுரியாவின் மூலக்கூறிலிருந்து நான்கு ஹை. அணுக்களை பெயர்க்கத்தேவையான மின்அளவு 0.3V மட்டுமே.. அதுவும் விலைகுறைந்த நிக்கல் எலக்ட்ரோடுகளின் உதவியால் ரொம்ப எளிதாக பிரித்தெடுக்கமுடியும் என்று இதனை தொடர்ந்து ஆராய்ச்சி செய்கிற Botte சொல்கிறார்..

தவிர, எக்கச்சக்கமாக 'வீணாக்கப்படுகிற' சிறுநீர், எரிபொருளாக பயன்படுமாயின், செலவுகள் கட்டுப்படுவதுடன், சுற்றுப்புறமும் சுத்தமாகும் இல்லையா... ???

ம்ம்ம்... கெமிஸ்ட்ரி வேலை செய்யுது-னு இதைத்தான் சொல்கிறார்களோ.. ???

ஆதாரம்:
http://www.physorg.com/news165836803.html
The Times of India - Sunday நாளிதழ்.

Sunday, July 19, 2009

WiziQ - இண்டர்நெட் ட்யூஷன்.

WiZiQ - அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டிருக்கிற இந்த தளம், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்..

ஆமாம்.. இந்த தளத்தின் முகப்பில், இரண்டு பகுதிகள். ஒன்று - ஆசிரியர்கள் தேடுவதற்கு. மற்றொன்று - மாணவர்கள் தேடுவதற்கு.

எந்த பாடப்பகுதியில் சேரவேண்டுமோ, அதை குறிப்பிட்டால், அதற்கான ஆசிரியர்களின் தகவல்கள் தரப்படுகிறது. இதேபோல,ஆசிரியர்களுக்கும் தான் கற்பிக்கிற பாடங்களை கற்க விரும்பும் மாணவர்களை தேடுவதற்கான optionம் தரப்பட்டுள்ளது..

ஆசிரியர்கள் வெவ்வேறான கற்பித்தல் முறையை பின்பற்ற வழி செய்திருக்கிறார்கள்.. உதாரணத்திற்கு, விர்ச்சுவல் க்ளாஸ்ரூம், ஆகியன.. அதோடு, மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு வைத்து, திருத்தி மதிப்பி்டும் options-ம் வைத்து, நிஜ வகுப்பறையைப்போலவே உருவாக்க வழிவகுக்கிறார்கள்..

பாட சம்பந்தமான கோப்புகளை இந்த தளம் மூலமாகவே பகிர்ந்துகொள்ளலாம் என்பது நன்று.

இலவசமாகவும், கட்டண சேவையாகவும் உள்ள இந்த தளம், தற்பொழுது beta வில் உள்ளது..

இதுதான் அந்தத்தளம் - http://www.wiziq.com

போய்த்தான் பாருங்க...

Sunday, March 8, 2009

காகித ப்ரொஜெக்ட்கள் !!!

நமது நாட்டில் மட்டும் சுமார் 18 மெகா ப்ரொஜெக்ட்கள், இன்னும் காகித அளவிலேயே உள்ளது என்பது தெரியுமா ??

இந்த திட்டங்கள் நிறைவேறினால் மட்டும், 1,64,000 பேருக்கு நேரடியான வேலைவாய்ப்பும், 2,70,000 பேருக்கு மறைமுகமான வேலைவாய்ப்பும் கிட்டும் என்பது தெரியுமா?

ஆம், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக(2003) வெறும் ஒப்பந்தம் வடிவிலோ, MoU மாதிரியோ இருக்கும் இந்த திட்டங்களினால் நாம் இழந்தது, 3 லட்சம் அளவினாலான வேலைவாய்ப்புக்களை.

ஏன் இந்த தாமதம்???

இந்த காலதாமதம், இடம் ஒதுக்குதல் நடைமுறைகளால் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள்..

'போஸ்கோ' எனும் இரும்பு கம்பெனி மட்டும், இந்தியாவில் வெறும்(!!!) ரூ.176 கோடி முதலிட்டால், சுமார் 35,730 பேருக்கு வேலை கிடைக்கும்.

சென்னையிலும் ஜேவி என்ற நிறுவனம் ரூ.4000 கோடி முதலீடு செய்தால், சுமார் 5000 பேருக்கு வேலை கிடைக்கும்..

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபியும் 750 கோடி ரூபாய் முதலீடு செய்யின், சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று மென்மேலும் புகையை கிளப்புகிறார்கள்..!!!

சூழ்நிலையை மேலும் புகைமண்டலமாக்க(!!!), இங்கே க்ளிக்கவும்..

இந்த ப்ராஜெக்ட் எல்லாம் நிஜத்திற்கு வர, கடவுளையும், அந்தந்த மாநில அரசுகளையும் வேண்டிகொள்வோம்...

Saturday, March 7, 2009

காரணம் ஆயிரம்...

வணக்கம்...

காரணம் ஆயிரம்...

"கோடாதி கோடி லட்சாப லட்ச
பிளாக்குகள்
ஏற்கனவே இருக்கின்றனவே..

இதில் நான் மட்டும்
என்ன புதிதாய்
சொல்லபோகிறேன்... "

என்று தோன்றும்தானே..

காரணம் அது ஒன்றுதான்...(ஆயிரமில்லை !!!)

நான் கற்றுக்கொண்டதை
உலகிற்கு தெரியப்படுத்த
முனையும் ஒரு
குழந்தையின்
விருப்பம்போல
இருப்பதுதான்...

மீண்டும் சந்திப்போம்...!!

:)

LinkWithin

Related Posts with Thumbnails