Saturday, October 3, 2009

ஆஞ்சநேயரும் அர்ச்சுனரும்...(தெரிந்த கதை?)

தன் சகோதரர்கள்(கெளரவர்கள்) மேல், கொடிய அஸ்திரங்களைப் பிரயோகிக்க மனமின்றி, பாசுபத அஸ்திரத்தை தேடிக்கொண்டுவர கிளம்பினார் அர்ச்சுனன்.(பாசுபதம் சற்று மயக்கமுறச்செய்யும். அவ்வளவே)

போகிற வழியில் அனுமன் தவம் செய்துகொண்டிருப்பதைக்கண்டார்.

அவரிடம் நக்கலாக,"உங்கள் இராமர் பெரிய வில்லாளி ஆயிற்றே. தான் ஒரே ஆளாக அம்பெய்தே ஒரு பலமான பாலம் கட்டமுடியுமே.. ஏன் குரங்குப்படையை வைத்து கற்களால் கட்டினார்?"

அர்ச்சுனின் கர்வத்தை அடக்கவேண்டும் என்ற கோபம் அனுமனுக்கு உண்டாயிற்று.

"அம்பால் ஆன பலமான பாலத்தை இப்பொழுதே கட்டுக. என் கால்சுண்டுவிரல் பட்டதும் அது சுக்குநூறாகும்"

அர்ச்சுனனும் விடவில்லை. "அப்படிமட்டும் நடந்தால், இங்கேயே வேள்வி ஏற்படுத்தி அதில் என்னை மாய்த்துக்கொள்வேன்" என சூளுரைத்தார்.

"நானும் சொல்கிறேன். அவ்வாறின்றி நான் தோற்றால் உமது போர்க்கொடியில் இருந்துகொண்டு, என் வாழ்நாள் முழுவதும் உமக்கு அடிமையாக இருப்பேன் "

உடனே, நாணில் அம்புகள் பூட்டி எய்து, ஒரு பாலம் உருவாக்கினார் அர்ச்சுனன். எத்தனைகோடி பேரையும் தாங்கும் பலமான பாலமாக அது இருந்தது.

இப்பொழுது, அனுமனுடைய முறை.

"ஜெய்ராம்" என்று இராமனைத் தியானித்ததும் அவர் உருவம் வளரத்தொடங்கியது...
பேருருக்கொண்ட அனுமன் பாலத்தின் மீது கால்வைத்தார்.

அந்தோ...எது நடக்கக்கூடதோ, அது நடந்தேவிட்டது. அனுமனின் கால்பட்டதும் பாலம் சுக்குநூறாகிப்போனது...

அனுமன் வெற்றிக்களிப்பில் ஆடினார். ஒடினார். கூக்குரலிட்டார்..

அர்ச்சுனனுக்கு அதிர்ச்சி... தமது வில் திறமை பொய்த்துவிட்டதே என்ற துக்கம் தாங்கமுடியவில்லை. வேறுவழியின்றி வேள்வி வளர்க்கத்தொடங்கினார்.

"வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, ஓர் அற்பக்குரங்கிடம் பந்தயம்கட்டி உயிரை விடப்போகின்றேனே... என் அண்ணனின் நிலையையும், என் கடமையையும் மறந்து, கர்வத்தால் மதிமயங்கிப்போனேனே. கண்ணா, என் இறைவா என்ன செய்யப்போகிறேன்" என்று கலங்கினார்.

தீக்குள் அர்ச்சுனன் குதிக்கமுற்பட்டபோது,"என்ன பிரச்சினை இங்கே?" என்றொரு குரல் கேட்டது.

பார்த்தால் ஒரு அந்தணன் நின்றுகொண்டிருந்தான்(அது கண்ணன் தான் என்பதை சொல்ல தேவையில்லை)

பந்தயத்தைப்பற்றி சொன்னார் அர்ச்சுனன்.

"பந்தயம் என்றாலே நடுவர் ஒருவர் வேண்டும். நடுவர் இன்றி நீ எப்படி தோற்றதாக கருதப்படும்?இப்பொழுது நான் நடுவராக இருக்கிறேன். உங்கள் போட்டியை மீண்டும் தொடங்குங்கள்"

போட்டி மீண்டும் தொடங்கியது.

தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார் அர்ச்சுனன். கண்ணனை தியானித்துக்கொண்டே மீண்டும் அம்பெய்து ஒரு பலமான பாலம் கட்டினார்.

அனுமன் கவலையே படவில்லை.
தன் பலம்பற்றி தனக்கே தெரியாத சாபம் பெற்றிருந்த அனுமனுக்கு தன் வல்லமை புரிந்தவுடன் கர்வம் வந்திருந்தது...

"இதோ பார்...உன் பாலம் எப்படி நொறுங்கப்போகிறது பார்" என்றபடி பாலத்தின்மீது ஏறி நின்றார்...ஆடினார்...ஓடினார்...குதித்தார்...பாலம் மட்டும் அப்படியே இருந்தது...ஒன்றும் ஆகவில்லை.

"பார்த்தாயா என் மாமனின்(கண்ணன்) சக்தியை? உங்கள் இராமரால்கூட உம்மை காப்பாற்றமுடியவில்லையே" என்று கேலிசெய்தார் அர்ச்சுனன்.

"நிறுத்துக உமது கொக்கரித்தலை. எங்கள் இராமரைவிட உன் கண்ணன் அவ்வளவு பெருமைக்குரியவன் இல்லை"

"யார் பெரியவர் என்று நான் சொல்கிறேன்", திரும்பினால், விஷ்ணு நின்றார்...

"கர்வம் தோன்றும்போது நம் கடமையும் பொறுப்புகளும் மறந்துவிடுகின்றன...ஒரே பரம்பொருளின் இரு அவதாரங்கள்தான் இராமனும்,கண்ணனும்...அப்படியிருக்க இதில் யார் பெரியவன் என்பது அர்த்தமற்ற விவாதம். இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணரமறந்துவிட்டீர்கள்"

இருவரும் நெகிழ்ந்து போய் நின்றார்கள்...

”அதுவும் தவிர, அர்ஜூனனுக்கு பாரதப்போரில் அனுமனின் ஆசிர்வாதம் அவசியம் தேவை. அதற்காக அர்ஜூனனின் போர்க்கொடியில் இருந்துகொண்டு ஊக்கமளிக்கவேண்டுமென்பதலால், இந்த சிறு திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டது..”

“அப்படியே ஆகட்டும் பிரபோ..!!” என்றார் அனுமன்.

பிறகு அனுமன் தான் சொன்னபடி அர்ச்சுனன் போர்க்கொடியில் இருந்துகொண்டு தன் வாழ்நாள்மட்டும் சேவை செய்தார்.

(ஆஞ்சநேயர் புராணத்திலிருந்து) - இது ஒரு மீள்பதிவு சில மாற்றங்களுடன்.

2 comments:

  1. நல்ல கதை. சூப்பர் தல

    ReplyDelete
  2. நன்றி ஜெய்சங்கர் :) உங்கள் கருத்துக்கும்.

    ReplyDelete

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...