Thursday, April 28, 2011

எண்ணச்சிதறல்கள் - 29/04/2011 (வெள்ளி)

Yahoo News!

ழுதுவது அவ்வளவு சுலபமானதாகயில்லை! அதனால்தான் படிக்கத்துவங்கிவிட்டேன். தற்போதைக்கெல்லாம் அதிகம் படிப்பது - யாஹூ செய்திகள். வட இந்திய முக்கியஸ்தர்கள், சினிமாக்காரர்களின் வாழ்க்கைமுறைகளை(Lifestyle) பற்றிய செய்தி மட்டும் தந்தவர்கள், உருப்படியாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள், தங்கம், வெள்ளி மற்றும் ETF  போன்ற முதலீட்டு ஆலோசனைகள், உடல்நலம் மற்றும் டயட் முதலான கட்டுரைகள் என சக்கைப்போடு போடுகின்றார்கள்.. அண்மையில், எனக்கு ரொம்பப்பிடித்தது தலைப்பு - இந்தியாவில் பணவீக்கம் எவ்வாறு நிகழ்கிறது? என்று கணித விளக்கங்களோடு வெளியிட்டிருந்தார்கள்!

(Sid, Dippy, Sallu, Kat, Karuna - இவையெல்லாம் என்ன ? - விஐபிகளுக்கு யாஹூ இட்ட செல்லப்பெயர்கள் !  கடைசிப்பெயர் நமக்கு பரிச்சியமானதுதான் - முதல்வர் கருணாநிதி! மற்றவர்கள் - சித்தார்த் மல்லையா, தீபிகா படுகோன், சல்மான்கான்,கேத்ரினா கைப்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

தென்றல் (சன் டிவி)!

துவரை மெகா தொடர் என்று எதையும் பார்த்ததில்லை.. விழுதுகள்(முதல் மெகா) மட்டும் பார்த்திருக்கிறேன் ஒரு சஸ்பென்ஸூக்காக (”யார் பெரியவரின் வாரிசு?”) அதற்கு அடுத்து இப்பொழுது தென்றல்!

வழக்கமான  மெகா தொடரின் ஃபார்முலாக்கள்  எவற்றுக்கும் குறைவில்லாத தொடர்தான் தென்றலும்! தொடர் முடிந்தபாடில்லை, ஆனால் வில்லிகள் மட்டும் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள் - தமிழ்-ன் அம்மா, துளசியின் சித்தி, அதற்குப்பின் சாரு, அப்பப்போ தமிழ்-ன் தங்கை, இப்பொழுது சுந்தரி(யுவராணி கேரக்டர்), மற்றும் ஐஸ்வர்யா கேரக்டர். இன்னும் யார்யார் எல்லாம் வில்லியாகப்போகிறார்களோ!

ஐஸ்வர்யா தான் துளசியின் அம்மா என்று எங்கள் வீட்டு உளவாளிகள்(!!!) சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் !

தகவல் பெறும் சட்டத்தில் எதையாவது கேட்டால், அந்த தகவல் எங்களிடம் இல்லை என்கிற காலம் இது! குறைந்த பட்சம் இசை யாரென த.பெ.ச. மூலம் கேட்டுச்சொல்வார்களா?   (வசனம் : விகடன் புகழ் எழில்வரதன்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நூல் அறிமுகம் : திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)

கையில் சிறு சிறு புத்தகங்களை வைத்திருப்பது எப்பொழுதும் நலம்! பயணங்களிலும் மற்றும் காத்திருத்தலின் போதும் போரடித்தால், படிப்பதற்கு! புத்தகக்காட்சிகளில் எக்கச்சக்கமாக நான் அள்ளுவது, சிறிய நூல்களைத்தான்! செல்போனில் MP3 புத்தகங்களாயிருந்தால் (Audio Books) இன்னும் வசதி! கிழக்கு பதிப்பகம் போன்றோர் இவ்வாறு வெளியிடுகிறார்கள்!  சரி இதை இங்கேயே விட்டுவிடுவோம்! (ரொம்ப ’வழவழ’க்கிறேன் இல்ல??!!)

திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)  - இது ஒரு பழைய நூலின் மறுபதிப்பு (அலைகள் வெளியீட்டகம்; விலை:40) திருக்குறள் தெளிவுரை நூல்கள் இருக்கிற எல்லா நூலகங்களிலும் கட்டாயம் இருக்கவேண்டிய நூல் இது.

இருப்பதிலேயே சிறந்ததாக கருதப்படும் பரிமேலழகரின் குறள் தெளிவுரையிலும் சில குறள்கள், ஆசிரியரின் தமது மனப்போக்கின்படி தவறாக பொருளுரை எழுதப்பட்டனவாம். கவனிக்கவும்: மிகச்சில குறள்களே! எவை அவை? ஏன்? அதன் உண்மையான பொருள் யாது என்பதனை ஆசிரியர் நாமக்கல் கவிஞர், ’திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)’ என்ற ஆராய்ச்சி கட்டுரையின் மூலம் வெளியிடுகிறார்.

தலைப்புக்காரணம் ?? தான் சொல்ல வந்த கருத்தை புரிந்துகொள்ளாமல், வேறு கருத்தை பின்பற்றுகிறார்களே என்று வள்ளுவர் காதில் கேட்டால் அதிர்வாராம்!

சிறப்பான சில நூல்கள், படிப்பவர்களுக்கு எதையும் தனியாக சொல்லாமல், தானே உணர்ந்துகொள்ளுமாறு ஒரு தகவலை கொண்டிருக்கும். இந்த நூலிலும் அப்படி ஒன்று உண்டு. அது - ’அதிகாரத்தின் ஒரு குறளை மட்டும் தனியாக அர்த்தம் கொள்ளாமல், ஒரு அதிகாரத்தையே மொத்தமாக படித்து, சிந்தித்து, மொத்தமாக புரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்’ - என்பது! வாய்மை எனப்படுவது எப்பொழுதும் உண்மையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதல்ல, உண்மை வலிதரும் என்றால் தீங்கிழைக்காத பொய் சொல்வதும் வாய்மைதான் என்பது முழு அதிகாரம் படித்தால்தானே புரிகிறது!

வாழ்க்கையில்,எத்தனையோ சமயங்களில் பின்பற்ற நினைக்கும் அல்லது அவ்வப்போது மேற்கோள்களுக்காகவாவது நாம் பயன்படுத்தும் குறள்களை நாம் சரியாக புரிந்துவைத்திருக்கிறோமா என்ற சுயகேள்வியை கேட்கவைக்கின்றது இந்த நூல்.

குறிப்பாக, அறத்துப்பால் குறள்கள் யாவும் ஒரு நாடாளும் மன்னனுக்கு மட்டும் சொல்லப்பட்ட விஷயங்களல்ல! நவீன காலத்தில் அரசர்கள் எங்கேயிருக்கிறார்கள்? அரசனாக வள்ளுவர் உருவகப்படுத்துவது - ஒவ்வொரு குடும்பத்தலைவனையும்! என நூலாசிரியர் கூறுகிறார். அதாவது, இரண்டாயிரம் வருடங்களாக தன்னடக்கமாக இருக்கும் - Complete Personality Development Course!

இந்த நூலின் ஆசிரியர் - "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கு ஒரு குணமுண்டு" என்று முழங்கிய நாமக்கல் கவிஞர். கவிஞரின் சரிதையை படித்தபோது, உப்பு சத்தியாக்கிரகப்போராட்டத்தில் (ஒரு வருடம்) சிறையிலிருந்த சமயம் எழுதிய திருக்குறள் தெளிவுரை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அது இதுதானா என்பது ஒரு சந்தேகம்.

தன் உடல்நிலையை மேம்படுத்திக்கொள்வதற்காக சிறையில் கொடுக்கப்பட்ட காசை, திருக்குறள் நூல்கள் வாங்குவதற்கும் அதற்கு தெளிவுரை எழுதுவதற்காகவும் செலவு செய்தாராம் கவிஞர்.

கிடைக்குமிடம்
அலைகள் வெளியீட்டகம்,
4/9, 4ம் முதன்மைச்சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
சென்னை-600 024.
விலை : ரூ.40/-

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பறவைகளின் V-Formationகாலமாற்றங்களின் போது வெகுதூரங்களுக்கு செல்லும் பறவைகள் எவ்வாறு சோர்வில்லாமல் பறக்கின்றன? -

இதற்கு விடை :  பறக்கும்பொழுது அவை எடுத்துக்கொள்ளும் ‘வி’ வடிவம். ஒரு பறவையை பின் தொடர்ந்து பறக்கும் மற்ற எல்லா பறவைகளுக்கும் அதிக கடினமின்றி பறக்கமுடிகின்றது.

தலைமைப்பறவைக்கு மட்டும் காற்றோடு எதிர்நீச்சல். பின்னால் மற்றும் பக்கவாட்டில் பறக்கும் பறவைகளுக்கு வேலைப்பளு அதிகம் இல்லை. தலைவர் பறவை, சோர்வடையும்போது விளிம்பில் உள்ள பறவை தலைமையேற்றுக்கொண்டு முன்னே பறக்கும்! இப்படி பறப்பதனால், 70% அதிகமான தூரத்தை கடக்கின்றனவாம். இதெல்லாம் யார் இவற்றுக்கு சொல்லிக்கொடுத்தது??!!

இந்த பறக்கும்முறையைத்தான் போர் விமானங்களில் பயன்படுத்துகிறார்கள்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Vehicles மற்றும் Robots

ந்திரன் படத்தில் விஞ். வசிகரன், ஆராய்ச்சியாளர்களின் ஒப்புதல் வாங்குவதற்கு முன்னேயே தனது ரோபோவை வெள்ளோட்டம் பார்ப்பார். யோசித்துப்பார்த்தால், அது மிகவும் திகிலூட்டக்கூடிய விஷயமாகப்படும்!

நம்முடன் எப்பொழுதும் ஒரு Semi-Robot வாக இருப்பவை நமது வாகனங்களே! அதை ஓட்டுவதற்கே, எத்தனை சாலை விதிகள், ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் (சரிசரி மீறினால்தான் விபத்தாகிறதே!) . இப்படி இருக்கின்றபோது, எதிர்காலத்தில், ரோபோக்களை தக்கவிதத்தில் முறையாக தயாரிப்பதற்காக கம்பெனிக்காரர்களும் மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்காக அதன் பயனாளரும்  சரியான உரிமம் பெறவேண்டியதிருக்கும்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

திறந்த மூலத்தகவல்கள் (Open Data)

திறந்த நிரலிகளுடன் மென்பொருட்கள் தருவது மாதிரி, சில நிறுவனங்கள் தங்களது டேட்டாவை பயனாளர்களுக்கு பயன்படும் வகையில் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். உலக வங்கி,RBI,தேர்தல் ஆணையம்(ஹைய்யா!) முதலான பெரிய பொது நிறுவனங்களும் இதில் அடக்கம்! ஆனால் உங்கள் ஆசைக்காக ஸ்விஸ் வங்கித்தகவல்களெல்லாம் கிடைக்காது!

என்னுடைய அடிப்படையான அலுவலக வேலையே - மெட்ரிக்ஸ் தான். அதாவது, நிறைய தகவல்களை Raw Data வாக பல ஊடகங்களில் தருவார்கள். அவற்றை எங்கள் டேட்டாபேஸில் தரவிறக்கிக்கொண்டு, SQLல் குவரியோ இல்லை ஸ்டோர்ட் ப்ரொஸீஜரோ எழுதி, வேண்டிய ரிப்போர்ட்களை உருவாக்கி அனுப்புவோம். ரிப்போர்ட் என்றால் இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் மெய்மைகளும் விளக்கங்களும் (facts and figures) இடம்பெறுமாறு, தற்போதைய அல்லது எதிர்கால வணிகப்போக்கை புரிந்துகொள்ளும் வகையில் தயார் செய்வது!  தகவல்களே இல்லையென்றால்? ரிப்போர்ட் இல்லை!

Open Data - வால் என்ன நன்மை? 
ஒரு குறிப்பிட்ட இலக்கோடு முயற்சியில் இறங்கும் ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள் போன்றவர்கள்  தகவல்களுக்காக அலைந்து நோகாமல் ’அந்தத்தகவல்களை நாங்கள் தருகிறோம் நீங்கள் அதனை பயன்படுத்தி ஏதாவதொரு கண்டுபிடிப்புகள் கொண்டுவாருங்கள்’  என்றோ அல்லது சிலசமயம் அந்த எதிர்பார்ப்புகளுமின்றி அல்லது ஆட்சேபணைகளுமின்றி பொதுத்தகவல்களை வெளியிடுகின்றார்கள். அவர்களுக்கு, அதனை வைத்து Business and Financial Risk Analysis போன்றவற்றை சுயமாக ஆராய்ந்து சொல்லும் உபகரணங்களை கண்டுபிடித்து மட்டும் கொடுத்தால், கோயில் கட்டி கும்பிடுவார்கள்!

கல்லூரி இறுதி மாணவர்கள் ப்ரொஜக்ட்டுகளுக்காக அலைவார்கள். அவர்களுக்கும் இது பயனுள்ளதாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.

கீழே உள்ள இணைப்புகள் இன்னும் சொல்லும்: 
http://www.thehindu.com/sci-tech/internet/article425608.ece
http://www.hindu.com/biz/2011/03/28/stories/2011032856261600.htm

'டெட் (TED)' டில் வீடியோ

http://www.ted.com/talks/tim_berners_lee_the_year_open_data_went_worldwide.html

எந்தத்துறையின் ஓப்பன் டேட்டா வேண்டும்? கிடைக்கும் இந்த இணைப்பில்:
http://www.researchpipeline.com/mediawiki/index.php?title=Main_Page

நிரலிகளுக்கு புரியக்கூடிய வகையில் தகவல்களை மாற்றி தரும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு : http://www.opencivic.in/

ஓப்பன் டேட்டாவை அடிப்படையாக வைத்து சில போட்டிகள் - தக்க பரிசுகளுண்டு!


உலக வங்கி:   http://appsfordevelopment.challengepost.com/
ஒரு கல்வி மற்றும் சேவை நிறுவனம்:  http://www.donorschoose.org/hacking-education

* * * * * * * * * (மீண்டும் சந்திப்போம்!) * * * * * * * *

No comments:

Post a Comment

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

LinkWithin

Related Posts with Thumbnails