Saturday, December 17, 2011

எண்ணச்சிதறல்கள் ( 06-01-2012 வெள்ளி)

போனவாரம் எம்.ஐ4 படம் பார்த்துவிட்டு, அதைப்பற்றி பதிவெழுதி பாக்கெட்டில்(draft) வைத்திருந்தேன். அடுத்து - ராஜப்பாட்டை படம்! டான்2 பார்க்கலாம் என்று யோசனை இருந்தது. பிறகு, விமர்சனங்கள் அந்த அளவுக்கு இல்லை என்றவுடன் பின்வாங்கினேன்.

நான் விமர்சனம் எழுதவில்லை என்று யாரும் அழவில்லை என்றாலும், எதாவது எழுதி ’இலக்கிய சிகாமணி’ ஆகியேவிடுவது என்ற குறிக்கோளுடன்.. (உங்கள் கண்களில் தெரிவது - கொலவெறியா? பயமா?)

எம்.ஐ4 - ஜேம்ஸ்பாண்ட் மாதிரி ஒரு படம்! ட்ரிபிள் எக்ஸ் என்றொரு உளவாளிப்பட வரிசைகளையும் இவர்கள் ஜேம்ஸ்பாண்ட்-ற்கு போட்டியாக அறிமுகப்படுத்தியாக ஞாபகம்! எதுவும் எடுபடவில்லை! ஜேம்ஸ் ராக்ஸ்!
இந்தப்படத்தின் விசேஷமாக சொல்லவேண்டுமென்றால், பர்ஜ் காலிஃபா மீது நடப்பது, இந்திய அட்ராக்‌ஷனுக்காக அனில் கபூர் மற்றும் சன் நெட்வொர்க்.. அந்த டிவிகளில் கொஞ்சமே கொஞ்சம் தெரியும் நம்ம வடிவேலுவும், மனோபாலாவும்! (வடிவேலு-’நாமளும் ஒரு உலகப்படத்துல நடிச்சிட்டோம்!!!’) துபாய் மற்றும் இந்திய நாடுகளின் அறிமுகக்காட்சிகள் - பிரமாதம்! சும்மா சொல்லக்கூடாது... ஹெலிகாப்டர் ஷாட்டில் பாலைவனம் அவ்வளவு அழகு!   இந்தியாவிற்கு படப்பிடிப்பிற்கு நிஜமாக வந்தார்களா என்பது சந்தேகம் !!! செட் எல்லாம் தத்ரூபம்! நல்லவேளை இந்தத்தடவை இந்தியா ஏழைநாடு இல்லை! அந்த ஹோலோகிராம் சீனும் பிடித்தது..

ராஜப்பாட்டை -  ஒருவிக்ரம், ஒரு சுசீந்திரன், இருவரும் சேர்ந்தால் எப்படி படம் தரலாம்??!!! அந்த எதிர்ப்பார்ப்போடு போனால்?!! சேது, காசி, தெய்வதிருமகள் வரிசையிலுமில்லாமல், தில், தூள் வரிசையிலுமில்லாமல், இந்தப்பாட்டை தனி வழியாக இருக்கிறது ..

‘என்னுடைய படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் இது.. கே.விஸ்வநாத் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமை!’ என்று இயக்குனர் சுசீந்திரன் பெருமைப்பட்டிருந்தார். கே.விஸ்வநாத் அவர்களுக்கு ஏன் இப்படியொரு பாத்திரம் என்பது தெரியவில்லை. ’இந்தப்படம் எனக்கும் தீனியில்லை, விக்ரமிற்கும் தீனியில்லை’ என்பதெல்லாம் சரி; பார்க்கிறவர்களுக்காவது ’தீவணம்’ போட்டிருக்கலாமில்லையா..!!!

”படத்தில் சிறந்த - “ என்று ஒன்று ஏதாவது இருக்கணுமில்லையா, அது சிறப்பான பைட் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு! கொஞ்சம் கொஞ்சம் காமெடிக்காட்சிகள்! ஹீரோவின் காதலியிடம் செல்போன் இருப்பது தெரியாமல் கடத்துவது லாஜிக் மிஸ்ஸிங்கா, இல்லை காமெடியா? என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன்!

அண்மைக்கால அப்டேட் : ராஜப்பாட்டை இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது இங்கே!

* * * * * * * * * * * * * *
வைரல் வீடியோஸ்

* னுஷ் பற்றிய அடுத்த செய்தி வந்துவிட்ட நிலையில், கொலவெறி பழைய செய்தி! யூட்யூப்.காம் தனுஷ்-க்கு தங்க விருதையும்(இதுவும் பழைய செய்தி!), சிம்பு-க்கு வெண்கல விருதையும் தந்திருக்கிறார்கள். என்னது ஏனா? அவ்வளவு பேரு வேலவெட்டியில்லாம வீடியோ பார்த்திருக்கோம்!!! கோடி ஹிட்ஸ்கள் கொடுக்கிறோம், நமக்கொரு வெஞ்சனக்கிண்ணம் கூட கிடையாது !!! ம்ஹூம்!!!



ள்ளூரில் தான் வைரல் வீடியோ புதுசு! இணையத்தில், யூட்யூபில், தினம்தினம் யாராவது எதாவதொரு வீடியோ பதிவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதோ இந்த வீடியோவில் உள்ள பெண்ணுக்கு வயது - 14! ஊர் : சிட்னி -ஆஸ். நம்மூரில் பாட்டுக்கு ’வாயசை’ப்பார்கள். இவர் புருவம் அசைக்கிறார். ஒரு இரண்டு மூன்று தரம் திரும்பத்திரும்ப பார்த்தால், ஒரு அமானுஷ்ய கேள்வி மனதுக்குள் தோன்றிமறைகிறது ஏனோ ??



டிப்படையில், எல்லா வகையான ஓவியங்களிலும் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆசை. அழகான தஞ்சாவூர் ஓவியம் உட்பட! இது ஒரு விளம்பரப்படம் - ரொம்ப கிரியேட்டிவ் ஆக இருக்கிறது! எவ்வளவு நாளில் எடுத்திருப்பார்கள்??


* * * * * * * * * * * * * *
தென்றல் - தொலைக்காட்சித்தொடர்


ப்படியெப்படியோ போய்க்கொண்டிருக்கிறது கதை... வழக்கம்போல வசனங்கள் பக்கா! பின்னணியிசையும் பாராட்டத்தக்கது.. தகுந்த நேரத்தில் தகுந்த இசை அல்லது ஹம்மிங்! யார்னே தெரியல! புவி அண்ணன், ரித்தீஷ் அப்பா,துளசி அப்பா,எஸ்.என்.லட்சுமி பாட்டி - தவிர மற்றவர்கள் எல்லோரும் வில்லன்கள் -  ஹீரோ உட்பட(???!!!). ’எனக்கும் சீரியலில் சான்ஸ் தாருங்கள்’ என்று கேட்கிறவர்களுக்கெல்லாம் டைரக்டர் வில்லன் ரோல் கொடுத்துவிடுவார் என்று நினைக்கிறேன் !



* * * * * * * * * * * * * *

யார் ஒரிஜினல்??
ஸ்வாகத்-தில் சாப்பிடும்போதெல்லாம் “நீலே நீலே அம்பர்” என்கிற இந்திப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். கேட்பதற்கு அப்படியே - இளையராஜா-SPB யின் “இளைய நிலா.. பொழிகிறது”.

எது ஒரிஜினல்? எது காப்பி? தமிழ்தான் ஒரிஜினல்(1982), இந்திப்பாடல் 1983ல் உருவானது என்று ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார். நகல்தான் என்றாலும் சும்மா இல்லை. பிரபல கிஷோர்குமார் பாடிய அதில் வயலின் பிட் ஒன்று வரும் பாருங்கள்.  படக்காட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது தற்செயல்போல இல்லை!!!




* * * * * * * * * * * * * *
வீடியோ சர்ஃபிங் (V-Surfing)

ரு அமைதியான மாலைநேரத்தில், எல்லா பாடல்களின் விடியோக்களை இரண்டு இரண்டு வரிகள் ஓடவிட்டு கேட்டபிறகு கடைசியில் மிகவும் பிடித்த ஒருமுழுபாடலில் முடிப்பது - இதுதான் என்னுடைய தற்போதைய  பொழுதுபோக்கு!

இந்தவார வீ.சர்ஃபிங் பாடல்கள் - அதே வரிசையில்!

முதலில், ”தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒண்ணு..”, அடுத்தடுத்து - “என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்”, ”அடிப்பூங்குயிலே”, “ராசாவே ஒண்ண விடமாட்டேன்”, கடைசியில் முழுப்பாடல் - “சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி..”

தென்றல் காற்றே..] - [ என்னைத்தொட்டு..] - [அடிப்பூங்குயிலே] - [ராசாவே] - [சந்தைக்கு]


 * * * * * * * * * * * * * *

மீண்டும் பார்க்கலாம் !!!

Friday, November 18, 2011

எண்ணச்சிதறல்கள் ( 01-12-2011 வெள்ளி)


இதயம் பேத்துகிறது!

வஹர் சார் தலைப்பு இங்கு ஏன்? ப்ளாக்கர் செட்டிங்கில் புதுமையாக புகுத்துகிறேன் பேர்வழி என்று எதோ செய்யப்போய், தளத்தையே ஒரு வாரமாகக்காணோம்! தளத்தை மீட்டெடுத்தது வரை ஒரே தவிப்பு - அதான் இந்த தலைப்பு!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீடியாக்கள்!
டந்த ஒரு வருடமாக முதல்பக்கங்களில் வைத்து போற்றப்பட்ட செய்தி! அபி-ஐஸ்க்கு குழந்தை பிறக்கப்போவது. அதைக்கூட விட்டுவிட்டார்கள். பிறகு, பிக் பாஸில் ஒரு வெளிநாட்டு கவர்ச்சி மங்கை இணைந்ததை பெரிய செய்தியாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதுபோய், பால்,பெட்ரோல் விலையேற்றம், பேஸ்புக்கில் ’கொலைவெறி’யோடு ’கொலவெறி’,பவார்-அறை, திகார்-சிறை, மழை, நிவாரண உதவி அப்புறம் இடையிடையே மானே தேனே பொன்மானே... - ’செய்தியோடை’ என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஓடியேபோய்விடுகின்றது...


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Why this Kolaveri Kolaveri Di?



வீக்கிப்பீடியாவில்  தனிப்பக்கமே உருவாக்கிவிட்டார்கள். யூட்யூபில், இதுவரை 1 கோடியே 30 லட்சம் ஹிட்ஸ்கள்! தனுஷ்க்கு ’போதையில்’ இருப்பதுபோல பாடுவது தண்ணீர் ப(போ)ட்ட பாடு! அவரின் முதல் பாடல் ”நாட்டுச்சரக்கு நச்சுனுதான் இருக்கு”, பிறகு “ஒம்மேல ஆசதான்”, ”கொலவெறி” எல்லாமே போதைப்பாடல்கள்தான்..


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கத்தார் - சில துளிகள்

* கத்தார் நாட்டில், பதினைந்து, இருபது வருடங்களாக குடும்பத்துடன் செட்டிலான தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மலையாளிகள். ஆர்ம்ஸ்ட்ராங் முதன்முதலில் நிலாவுக்கு போகும்போது, அங்கே ஒரு நாயர்  - ஏற்கனவே - டீக்கடை போட்டிருந்தாராம்! சும்மாவா இந்த ஜோக்கை சொல்லியிருப்பானுங்க!! வாடகைவீடு தேடிக்கொண்டிருக்கிறோம். கேரள ஏஜெண்ட்கள் பேசும் தமிழ் மிகச்சிரிப்பாக இருக்கும்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை!) - “அல் துமாம்மாவில் ஒரி டபுள் பெட்ரூம் இரிகி. நஜ்மாவிலே சிங்கில் இரிகி...” இந்த ரேஞ்சுக்கு தமிழ் பேசுகிறார்கள்! நான் நினைத்துக்கொண்டேன் - “அகில உலகத்திலும் தமிழ் வாழ்ந்துகொண்டு இரிகி!” (கத்தார் நண்பர்கள் யாராவது டோஹாவில் வீடு வாடகைக்கு இருந்தா சொல்லுங்களேன்..! வீடு கிடைப்பது ரொம்ப சிரமமாக இருக்கிறது..:( )

* KUBOOS : தென்னிந்திய உணவகங்களும் இருக்கின்றன. நாங்கள் அடிக்கடி சாப்பிடுவது - பாரத் (எ) வசந்த பவன். கேரள ரெஸ்டாரண்ட்களில், மோட்டா, பாரிக், பாஸ்மதி மூன்றும் உண்டு. அரபிக் க்யுசின்களில், குபூஸ் என்ற ஐட்டத்தை இலவசமாக தருகிறார்கள். அவசியம் சேர்த்து வாங்கவேண்டிய தந்தூரி ஐட்டங்கள் மட்டும் காசுக்கு! இந்த குபூஸ் (குஷ்பூ, குஷ்பூனு படிச்சீங்கன்னா என் தப்பு இல்லீங்க), மைதா + கொஞ்சம் கோதுமையில் செய்யப்படுகிறதாம். தினம் தினம் சாப்பிட்டால், பெரிய ஆளாக - சைசில் - வருவீர்கள்  !! அவ்வளவு கலோரிஸ்! சரியான டயட்-டை பின்பற்ற விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு அல்ல குபூஸ்! அடிக்கடி வளைகுடாக்களுக்கு  விசிட் அடிக்கும் நண்பர்களுக்கு இது தெரிந்து இருக்கும். சொந்த ஊர் வரும்போது, ’வேறு ஆள்’ போன்று தோற்றமளிக்க சரக்கு மட்டுமில்லை.. இந்த குபூஸூம் ஒரு காரணம்!

* துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன்,ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் பழைய காலங்களில் -  1959 க்கு முன்பு - புழக்கத்தில் இருந்த பணம் - இந்திய ரூபாய்கள்!!  பிறகு, கிபி 1966 வாக்கில் இந்தியாவே அவர்களுக்கென்று அறிமுகம் செய்த பணம் - வளைகூடா ரூபாய். அந்த சமயங்களில், ஒரு இங்கிலாந்து பவுண்ட் நாணயத்தின் மதிப்பு, ரூ. 13.50 இந்திய ரூபாயாம் (ம்ஹூம் .. !!!). ரூபாய் மதிப்பு, குறைய குறைய வளைகுடா நாடுகள் ரூபாயை கைவிட்டு, தத்தம் கரன்ஸிகளை உருவாக்கவேண்டியிருந்தது. ஆரம்பத்தில், அந்த நாடுகளின் கரன்ஸிகள், ரூபாய்களுக்கு சமமான மதிப்பைக்கொண்டிருந்தன.

* ளைகுடா நாடுகளிலேயே முதன்முதலாக, கிபி 2022 வில், FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கப்போவதால், மொத்த கத்தாரும் புதுக்கோலம் போடத்தயாராக இருக்கிறது. துபாய் அளவுக்கு கட்டுமானத்துறையில் புகழ்பெறுவதற்காக பழைய கட்டிடங்களெல்லாம் இடிபடுகின்றது. சிங்கார டோஹா, சிங்கார வாக்ரா(ஹ்) எல்லாம் பார்க்கலாம் - கூடிய விரைவில்!

* தோ சொல்வார்கள் - ‘எள்ளு எண்ணையில வேகுது, ’......................’, எதுக்கு வேகுது??’. சென்னையில கடும்மழை, சாலைகளில் தண்ணீர் சரி.. எழில் வெயில் கொஞ்சும் பாலைவன கத்தாரில், அடைமழையும் சாலை தண்ணீர்த்தேங்கலும் இருந்தால் என்னவென்று சொல்வது?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

”நண்பன்”

வைரஸாக சத்யராஜ், சரியான தேர்வு. சரி, சைலன்ஸர் யார்? என்று ஆவலாக இருந்தது.. அதற்கு, சத்யன்! கொஞ்சம் சவாலான பாத்திரமாக இருக்கும் அவருக்கு(சாம்பிள் கீழே!). நிஜ ‘சைலன்ஸருக்கு’ ஹிந்தி தெரியாதாம். அந்த அப்பாவித்தனம் கூட அந்த காரெக்டருக்கு வெற்றியைத்தந்தது!

எனக்கொரு கேள்வி.., எல்லோரும் பார்த்துவிட்ட படத்தை ரீமேக்கி என்ன செய்யப்போகிறார்கள்??!!



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
”தில்லானா மோகனாம்பாள்” - கிடைக்கறியா ஒரு ஆவணப்படம்



திருமணத்திற்குப்பிறகு திருமதி.பத்மினி அவர்கள் நடித்த முதல்படம் என்று சொல்லப்பட்டது. இந்தக்காலத்து, சைஸ் ஜீரோ, சிக்ஸ் பேக்ஸ்-ஸோடு ஒப்பிட்டப்பார்க்கமுடியாது என்றாலும், இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பும் க்ளாஸ், இல்லையா!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

சலங்கையிட்டால் ஒரு மாது...!



விஜய டி. ராஜேந்தர் இயக்கி நடித்த இந்தப்படத்தில் தான் முதன்முதலாக அமலா அறிமுகமானார். டி.ஆர். தான் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் கூட! ஏனோ தானோ என்றெல்லாம் இல்லை! ஆகா ஓகோ!! உதாரணத்திற்கு, இந்தப்பாடல் இசைஞானியையே திரும்பிப்பார்க்கவைத்திருக்கும் என்று நினைக்கத்தோன்றுகிறது. பாடல் வரிகள் மட்டும் எப்படியாம் - ??? 

"தடாகத்தில் மீன் ரெண்டு, காமத்தில் தடுமாறி தாமரை பூமீது விழுந்தனவோ, இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ???!!”

Hats Off to you TR Sir!!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மீண்டும் சந்திப்போம்!!!

Tuesday, August 9, 2011

எண்ணச்சிதறல்கள் (2011-11-16)

இந்தப்பதிவு - எனக்கு ’இரண்டு முதல்’கள்

1) கத்தார் - நாட்டிலிருந்து இந்த பதிவு!
2) என் புது லேப்டாப்பில் இருந்தும்!
-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-


DUNE BASHING





ஒரு Sand Dune சிகரத்திலிருந்து தோன்றும் காட்சி. 
இங்கு தெரியும் நீர் வளாகம் சுமார் 100-150 அடிக்குக்கீழே!
(படங்களை பெரிதாக்கக்காண கிளிக்கவும்)

கத்தாரில், பாலைவன சஃபாரி (Desert Safari) என்று ஒரு நாள் போனோம். Sand Dunes-களில் புல்லரிக்கும் Dune Bashing! மணல் சிகரங்களில் பிறழ முயலும் அந்தத் தருணங்களில் சுதாரிப்பாக திருப்பி ஓட்டவேண்டும். தவறினால், உச்சியில் இருந்து குட்டிக்கரணம்தான். திறமையான ஓட்டுனர் -  நாங்கள் மண் கவ்விவிடாமல் ஓட்டினார். தனியாக உருண்டால் அடிபடாது - வண்டியோடு உருண்டால்? நல்லதொரு ட்யூன் பேஷிங் வீடியோ இங்கே!







என் போன் காமராவிலிருந்து காரின் காலடி!
(படங்களை பெரிதாக்கக்காண கிளிக்கவும்) 


-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

டேப்ளட் கணினி புரட்சி (Aakash Tab - Rs.2999/-)

போட்டி போட்டுக்கொண்டு நான் நீ என்று ஆம்லேட் மாதிரி டேப்ளட் வெளியிடுகிறார்கள். ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகியவற்றின் ஆதிக்கத்தால், ஜாம்பவான் நோக்கியாவும் தங்கள் பதிப்பு டேப்பை அறிவிக்க வேண்டியிருக்கிறது. குறைந்த விலை ‘ஆகாஷ்’, ஒரு பெரிய புரட்சி என்று சொல்லப்படுகிறது. காசுக்கேற்ற தோசை என்றும் சொல்கிறார்கள். ஆகாஷ் டேப்பை முன் பதிவு செய்யலாம் இங்கே :
 
http://www.aakashdatawind.com/


-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

ப(பி)டித்த புத்தகம்

நானோடெக்னாலஜி - சுஜாதா!


’நானோவை முழுவதும் புரிந்துகொள்ள முயல்வது, கடவுளின் அருகே நம்மை இட்டுச்செல்லும்’ போன்ற சுஜாதா அவர்களின் எழுத்துப்பிரயோகம் பிரமிக்க வைக்கிறது. 

40 பக்கமுள்ள இந்த சிறியப்புத்தகத்தில், மாலிக்யூல் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்ப அறிமுகங்களும் கிடைக்கின்றது. மனிதன் தானே வளர்வதுபோல், தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் எதிர்கால கம்ப்யூட்டர்கள் - எப்படி கேட்கவே சிலிர்ப்பாக இல்லை?

சுஜாதா-வின் புத்தகத்திற்கு விளம்பரம் தேவையில்லை! உயிர்மை பதிப்பகத்தில் தேடினால் இந்தப்புத்தகம் கிடைக்கிறது!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-


இனி சமீபத்தில் நான் வரைந்த கார்ட்டூன்களின் அணிவகுப்பு.

சிக்வே பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். ஒரு ஐடி நிறுவனத்தில், Cost-cutting-கிற்கு முன்னேயும் பின்னேயும்! 



-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-


இதற்கு விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன் !!!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

ஆ.. இந்த விளம்பரங்கள்..

திரைப்படம் என்றில்லாமல் சில நொடிகள் தோன்றும் விளம்பரங்களும் நல்ல களமாகி வருகின்றன புது இயக்குனர்களுக்கு!

* TOI-சென்னைப்பதிப்பு விளம்பரத்தில் தூங்கிக்கொண்டே இருக்கிறார் ஒருத்தர். போரடிக்கும் நாளிதழிலிருந்து, சுவாரஸ்யமான நாளிதழுக்கு மாறுங்கள் என்பதை சொல்வதாக இருக்கிறது. ’ஏற்கனவே உள்ள நாளிதழ்கள் ஒவ்வொருத்தரையும் சம்பவங்களின் இடத்திற்கே கொண்டு செல்கின்றன, ஆனால் நாம்தான் தூங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்றும் புரிந்துகொள்ளலாமா? இது அந்த விளம்பரத்திற்கு வெற்றியா?

* எதிர்மறையான பயத்தை ஏற்படுத்தி காப்பீட்டு விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று விதியே இருக்கிறது. ஆனாலும், சாலை விபத்து பயம் ஏற்படுத்துகிறது ஒரு விளம்பரம்!

* Facebook-ல் கிடைத்த விளம்பரத்தில். குழந்தைகளின் கலாச்சாரமும் போச்சா? என்று கேள்வி கேட்க முடியாது!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

ரிலாக்ஸ் - புதுப்பாடல்!  உருமி!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

மீண்டும் சந்திப்போம்... : )

Thursday, April 28, 2011

எண்ணச்சிதறல்கள் - 29/04/2011 (வெள்ளி)

Yahoo News!

ழுதுவது அவ்வளவு சுலபமானதாகயில்லை! அதனால்தான் படிக்கத்துவங்கிவிட்டேன். தற்போதைக்கெல்லாம் அதிகம் படிப்பது - யாஹூ செய்திகள். வட இந்திய முக்கியஸ்தர்கள், சினிமாக்காரர்களின் வாழ்க்கைமுறைகளை(Lifestyle) பற்றிய செய்தி மட்டும் தந்தவர்கள், உருப்படியாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள், தங்கம், வெள்ளி மற்றும் ETF  போன்ற முதலீட்டு ஆலோசனைகள், உடல்நலம் மற்றும் டயட் முதலான கட்டுரைகள் என சக்கைப்போடு போடுகின்றார்கள்.. அண்மையில், எனக்கு ரொம்பப்பிடித்தது தலைப்பு - இந்தியாவில் பணவீக்கம் எவ்வாறு நிகழ்கிறது? என்று கணித விளக்கங்களோடு வெளியிட்டிருந்தார்கள்!

(Sid, Dippy, Sallu, Kat, Karuna - இவையெல்லாம் என்ன ? - விஐபிகளுக்கு யாஹூ இட்ட செல்லப்பெயர்கள் !  கடைசிப்பெயர் நமக்கு பரிச்சியமானதுதான் - முதல்வர் கருணாநிதி! மற்றவர்கள் - சித்தார்த் மல்லையா, தீபிகா படுகோன், சல்மான்கான்,கேத்ரினா கைப்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

தென்றல் (சன் டிவி)!

துவரை மெகா தொடர் என்று எதையும் பார்த்ததில்லை.. விழுதுகள்(முதல் மெகா) மட்டும் பார்த்திருக்கிறேன் ஒரு சஸ்பென்ஸூக்காக (”யார் பெரியவரின் வாரிசு?”) அதற்கு அடுத்து இப்பொழுது தென்றல்!

வழக்கமான  மெகா தொடரின் ஃபார்முலாக்கள்  எவற்றுக்கும் குறைவில்லாத தொடர்தான் தென்றலும்! தொடர் முடிந்தபாடில்லை, ஆனால் வில்லிகள் மட்டும் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள் - தமிழ்-ன் அம்மா, துளசியின் சித்தி, அதற்குப்பின் சாரு, அப்பப்போ தமிழ்-ன் தங்கை, இப்பொழுது சுந்தரி(யுவராணி கேரக்டர்), மற்றும் ஐஸ்வர்யா கேரக்டர். இன்னும் யார்யார் எல்லாம் வில்லியாகப்போகிறார்களோ!

ஐஸ்வர்யா தான் துளசியின் அம்மா என்று எங்கள் வீட்டு உளவாளிகள்(!!!) சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் !

தகவல் பெறும் சட்டத்தில் எதையாவது கேட்டால், அந்த தகவல் எங்களிடம் இல்லை என்கிற காலம் இது! குறைந்த பட்சம் இசை யாரென த.பெ.ச. மூலம் கேட்டுச்சொல்வார்களா?   (வசனம் : விகடன் புகழ் எழில்வரதன்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நூல் அறிமுகம் : திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)

கையில் சிறு சிறு புத்தகங்களை வைத்திருப்பது எப்பொழுதும் நலம்! பயணங்களிலும் மற்றும் காத்திருத்தலின் போதும் போரடித்தால், படிப்பதற்கு! புத்தகக்காட்சிகளில் எக்கச்சக்கமாக நான் அள்ளுவது, சிறிய நூல்களைத்தான்! செல்போனில் MP3 புத்தகங்களாயிருந்தால் (Audio Books) இன்னும் வசதி! கிழக்கு பதிப்பகம் போன்றோர் இவ்வாறு வெளியிடுகிறார்கள்!  சரி இதை இங்கேயே விட்டுவிடுவோம்! (ரொம்ப ’வழவழ’க்கிறேன் இல்ல??!!)

திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)  - இது ஒரு பழைய நூலின் மறுபதிப்பு (அலைகள் வெளியீட்டகம்; விலை:40) திருக்குறள் தெளிவுரை நூல்கள் இருக்கிற எல்லா நூலகங்களிலும் கட்டாயம் இருக்கவேண்டிய நூல் இது.

இருப்பதிலேயே சிறந்ததாக கருதப்படும் பரிமேலழகரின் குறள் தெளிவுரையிலும் சில குறள்கள், ஆசிரியரின் தமது மனப்போக்கின்படி தவறாக பொருளுரை எழுதப்பட்டனவாம். கவனிக்கவும்: மிகச்சில குறள்களே! எவை அவை? ஏன்? அதன் உண்மையான பொருள் யாது என்பதனை ஆசிரியர் நாமக்கல் கவிஞர், ’திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)’ என்ற ஆராய்ச்சி கட்டுரையின் மூலம் வெளியிடுகிறார்.

தலைப்புக்காரணம் ?? தான் சொல்ல வந்த கருத்தை புரிந்துகொள்ளாமல், வேறு கருத்தை பின்பற்றுகிறார்களே என்று வள்ளுவர் காதில் கேட்டால் அதிர்வாராம்!

சிறப்பான சில நூல்கள், படிப்பவர்களுக்கு எதையும் தனியாக சொல்லாமல், தானே உணர்ந்துகொள்ளுமாறு ஒரு தகவலை கொண்டிருக்கும். இந்த நூலிலும் அப்படி ஒன்று உண்டு. அது - ’அதிகாரத்தின் ஒரு குறளை மட்டும் தனியாக அர்த்தம் கொள்ளாமல், ஒரு அதிகாரத்தையே மொத்தமாக படித்து, சிந்தித்து, மொத்தமாக புரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்’ - என்பது! வாய்மை எனப்படுவது எப்பொழுதும் உண்மையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதல்ல, உண்மை வலிதரும் என்றால் தீங்கிழைக்காத பொய் சொல்வதும் வாய்மைதான் என்பது முழு அதிகாரம் படித்தால்தானே புரிகிறது!

வாழ்க்கையில்,எத்தனையோ சமயங்களில் பின்பற்ற நினைக்கும் அல்லது அவ்வப்போது மேற்கோள்களுக்காகவாவது நாம் பயன்படுத்தும் குறள்களை நாம் சரியாக புரிந்துவைத்திருக்கிறோமா என்ற சுயகேள்வியை கேட்கவைக்கின்றது இந்த நூல்.

குறிப்பாக, அறத்துப்பால் குறள்கள் யாவும் ஒரு நாடாளும் மன்னனுக்கு மட்டும் சொல்லப்பட்ட விஷயங்களல்ல! நவீன காலத்தில் அரசர்கள் எங்கேயிருக்கிறார்கள்? அரசனாக வள்ளுவர் உருவகப்படுத்துவது - ஒவ்வொரு குடும்பத்தலைவனையும்! என நூலாசிரியர் கூறுகிறார். அதாவது, இரண்டாயிரம் வருடங்களாக தன்னடக்கமாக இருக்கும் - Complete Personality Development Course!

இந்த நூலின் ஆசிரியர் - "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கு ஒரு குணமுண்டு" என்று முழங்கிய நாமக்கல் கவிஞர். கவிஞரின் சரிதையை படித்தபோது, உப்பு சத்தியாக்கிரகப்போராட்டத்தில் (ஒரு வருடம்) சிறையிலிருந்த சமயம் எழுதிய திருக்குறள் தெளிவுரை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அது இதுதானா என்பது ஒரு சந்தேகம்.

தன் உடல்நிலையை மேம்படுத்திக்கொள்வதற்காக சிறையில் கொடுக்கப்பட்ட காசை, திருக்குறள் நூல்கள் வாங்குவதற்கும் அதற்கு தெளிவுரை எழுதுவதற்காகவும் செலவு செய்தாராம் கவிஞர்.

கிடைக்குமிடம்
அலைகள் வெளியீட்டகம்,
4/9, 4ம் முதன்மைச்சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
சென்னை-600 024.
விலை : ரூ.40/-

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பறவைகளின் V-Formation



காலமாற்றங்களின் போது வெகுதூரங்களுக்கு செல்லும் பறவைகள் எவ்வாறு சோர்வில்லாமல் பறக்கின்றன? -

இதற்கு விடை :  பறக்கும்பொழுது அவை எடுத்துக்கொள்ளும் ‘வி’ வடிவம். ஒரு பறவையை பின் தொடர்ந்து பறக்கும் மற்ற எல்லா பறவைகளுக்கும் அதிக கடினமின்றி பறக்கமுடிகின்றது.

தலைமைப்பறவைக்கு மட்டும் காற்றோடு எதிர்நீச்சல். பின்னால் மற்றும் பக்கவாட்டில் பறக்கும் பறவைகளுக்கு வேலைப்பளு அதிகம் இல்லை. தலைவர் பறவை, சோர்வடையும்போது விளிம்பில் உள்ள பறவை தலைமையேற்றுக்கொண்டு முன்னே பறக்கும்! இப்படி பறப்பதனால், 70% அதிகமான தூரத்தை கடக்கின்றனவாம். இதெல்லாம் யார் இவற்றுக்கு சொல்லிக்கொடுத்தது??!!

இந்த பறக்கும்முறையைத்தான் போர் விமானங்களில் பயன்படுத்துகிறார்கள்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Vehicles மற்றும் Robots

ந்திரன் படத்தில் விஞ். வசிகரன், ஆராய்ச்சியாளர்களின் ஒப்புதல் வாங்குவதற்கு முன்னேயே தனது ரோபோவை வெள்ளோட்டம் பார்ப்பார். யோசித்துப்பார்த்தால், அது மிகவும் திகிலூட்டக்கூடிய விஷயமாகப்படும்!

நம்முடன் எப்பொழுதும் ஒரு Semi-Robot வாக இருப்பவை நமது வாகனங்களே! அதை ஓட்டுவதற்கே, எத்தனை சாலை விதிகள், ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் (சரிசரி மீறினால்தான் விபத்தாகிறதே!) . இப்படி இருக்கின்றபோது, எதிர்காலத்தில், ரோபோக்களை தக்கவிதத்தில் முறையாக தயாரிப்பதற்காக கம்பெனிக்காரர்களும் மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்காக அதன் பயனாளரும்  சரியான உரிமம் பெறவேண்டியதிருக்கும்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

திறந்த மூலத்தகவல்கள் (Open Data)

திறந்த நிரலிகளுடன் மென்பொருட்கள் தருவது மாதிரி, சில நிறுவனங்கள் தங்களது டேட்டாவை பயனாளர்களுக்கு பயன்படும் வகையில் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். உலக வங்கி,RBI,தேர்தல் ஆணையம்(ஹைய்யா!) முதலான பெரிய பொது நிறுவனங்களும் இதில் அடக்கம்! ஆனால் உங்கள் ஆசைக்காக ஸ்விஸ் வங்கித்தகவல்களெல்லாம் கிடைக்காது!

என்னுடைய அடிப்படையான அலுவலக வேலையே - மெட்ரிக்ஸ் தான். அதாவது, நிறைய தகவல்களை Raw Data வாக பல ஊடகங்களில் தருவார்கள். அவற்றை எங்கள் டேட்டாபேஸில் தரவிறக்கிக்கொண்டு, SQLல் குவரியோ இல்லை ஸ்டோர்ட் ப்ரொஸீஜரோ எழுதி, வேண்டிய ரிப்போர்ட்களை உருவாக்கி அனுப்புவோம். ரிப்போர்ட் என்றால் இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் மெய்மைகளும் விளக்கங்களும் (facts and figures) இடம்பெறுமாறு, தற்போதைய அல்லது எதிர்கால வணிகப்போக்கை புரிந்துகொள்ளும் வகையில் தயார் செய்வது!  தகவல்களே இல்லையென்றால்? ரிப்போர்ட் இல்லை!

Open Data - வால் என்ன நன்மை? 
ஒரு குறிப்பிட்ட இலக்கோடு முயற்சியில் இறங்கும் ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள் போன்றவர்கள்  தகவல்களுக்காக அலைந்து நோகாமல் ’அந்தத்தகவல்களை நாங்கள் தருகிறோம் நீங்கள் அதனை பயன்படுத்தி ஏதாவதொரு கண்டுபிடிப்புகள் கொண்டுவாருங்கள்’  என்றோ அல்லது சிலசமயம் அந்த எதிர்பார்ப்புகளுமின்றி அல்லது ஆட்சேபணைகளுமின்றி பொதுத்தகவல்களை வெளியிடுகின்றார்கள். அவர்களுக்கு, அதனை வைத்து Business and Financial Risk Analysis போன்றவற்றை சுயமாக ஆராய்ந்து சொல்லும் உபகரணங்களை கண்டுபிடித்து மட்டும் கொடுத்தால், கோயில் கட்டி கும்பிடுவார்கள்!

கல்லூரி இறுதி மாணவர்கள் ப்ரொஜக்ட்டுகளுக்காக அலைவார்கள். அவர்களுக்கும் இது பயனுள்ளதாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.

கீழே உள்ள இணைப்புகள் இன்னும் சொல்லும்: 
http://www.thehindu.com/sci-tech/internet/article425608.ece
http://www.hindu.com/biz/2011/03/28/stories/2011032856261600.htm

'டெட் (TED)' டில் வீடியோ

http://www.ted.com/talks/tim_berners_lee_the_year_open_data_went_worldwide.html

எந்தத்துறையின் ஓப்பன் டேட்டா வேண்டும்? கிடைக்கும் இந்த இணைப்பில்:
http://www.researchpipeline.com/mediawiki/index.php?title=Main_Page

நிரலிகளுக்கு புரியக்கூடிய வகையில் தகவல்களை மாற்றி தரும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு : http://www.opencivic.in/

ஓப்பன் டேட்டாவை அடிப்படையாக வைத்து சில போட்டிகள் - தக்க பரிசுகளுண்டு!


உலக வங்கி:   http://appsfordevelopment.challengepost.com/
ஒரு கல்வி மற்றும் சேவை நிறுவனம்:  http://www.donorschoose.org/hacking-education

* * * * * * * * * (மீண்டும் சந்திப்போம்!) * * * * * * * *

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...