Monday, January 1, 2024

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், 'இன்னிசை அளபெடை'-யை எளிதாகக்காணலாம் (இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனிமையாக இசைப்பதற்காக ஒத்த இசையெழுத்து கூட்டி எழுதப்படுவது Source:wikipedia)

இந்த சினிமாப்பாடலை பாருங்களேன் ("பூந்தோட்ட காவல்காரன்"):

"கானக் கருங்குயிலே கச்சேரி வைக்கப்போறேன்" (இளையராஜா/கங்கை அமரன்)

(சின்ன வயதில் 'கானேக்கா ரங்குயிலே' என்று பாடிகொண்டிருப்பேன் ;P யேசுதாஸ் அவர்கள் பாடுவதும் கிட்டத்தட்ட அவ்வாறுதானிருக்கும்!)

எஸ்பிபி அவர்கள் பாடிய மற்றொமொரு பாடல்("அம்மன் கோவில் கிழக்காலே"):

"சின்ன மாணிக்குயிலே.. மெல்ல வாரும் மயிலே"(இளையராஜா/கங்கை அமரன்)

வேறு பாடல் இருக்கிறதா என பகிரவும். 

Tuesday, December 19, 2023

சுத்தமாவும் சுகாதாரமாவும் வைத்திருக்கவேண்டும்

 யார் 'சுகாதாரம்' என்ற சொல்லை 'சுத்தம்' என மொழிபெயர்த்தார்கள் தெரியவில்லை. எனக்கென்னமோ 'சுகாதாரம்' ஒரு 'அட்ஜெக்ட்டிவ்(adjective)' போல் தோன்றுகிறது. 'சுகம் + 'ஆதாரம்' (source of ease/happiness) என்பது எப்படி 'சுத்தத்திற்கு' சமமாக பொருள்கொண்டிருக்கமுடியும் என்று 'சுத்தமாக' புரியவில்லை!

'சுத்தமே சுகாதாரம்' என்பது 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது போன்று சொல்லப்பட்டிருந்து, காலப்போக்கில் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான் என்றாகிவிட்டது போல! 

'வீட்டை நாட்டை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்' என்ற வாக்கியம் சரியானது தான்; அதை 'சுத்தம்' என்று பொருள்கொண்டாலும் சரி, 'நிம்மதி' என நினைத்துக்கொண்டாலும் சரி! உங்கள் விருப்பம்!

மீண்டும் உரையாற்றுவோம்.

Sunday, December 17, 2023

'வாழ்வின்' வயது

 என் மகளிடம் வீட்டிலிருக்கும் புத்தகங்களை பற்றி கூறுகையில், "இந்த புத்தகம் உனக்கு அண்ணன், அந்த புத்தகம் பெரியப்பா" என வேடிக்கையாக சொல்வது வழக்கம். சில நூல்கள் கல்லூரியில் படித்த பொழுது வாங்கியவை. அவ்வளவு நாட்கள் படிக்காமல் வைத்திருக்கிறோமே என ஆதங்கப்பட்டுக்கொள்ள! எல்லாம் ஒரு வேடிக்கைக்காகத்தான். 

புத்தகங்கள் தாண்டி, பின்னர் 'ஓவியத்தூரிகை, கணினி, திரைப்படங்கள்', என பிற அரூப அஃற்றினை பொருட்களுக்கும் 'வயதைப்'பொருத்தி பார்க்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது.

பேருந்தில் காணக்கிடைத்த குறள் ஒன்று : 

"இன்னா செய்தாரை எளிதாகப் போல் வினைத்தெய்வம் 

வாழ்வாகப் பூசித் துணை."

மூளைப்புயல்(brainstorm) உருவாகியது! தமிழின் வயது ஒருபுறம் இருக்கட்டும். இந்த 'வாழ்வு' என்ற சொல்லின் வயது என்ன? 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமா? ஒரு நாளில் எத்தனை தடவைக்குமேல் இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றோம். 'அவனுக்கு வந்த வாழ்வை பாரு', 'வாழ்வுதான்’ என.

திருக்குறள்க்கு முந்தைய எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு முதலான நூல்களிலும் 'வாழ்' மட்டுமன்றி பல 'வயதற்ற'(ageless?) சொற்கள் காணப்படுகின்றன. எல்லோரும் ‘வாழ்த்த வயதில்லை’ என்பார்கள். ஆனால், 'வாழ்'விற்கு தான் (மற்றும் பிற தமிழ் சொற்களுக்கும்) வயதில்லை!

Saturday, November 14, 2015

எண்ணச்சிதறல்கள் - நவம்பர் 14 (சனிக்கிழமை).

சம்பந்தமே இல்லாமல் 'கண்டாங்கி, கண்டாங்கி'!

விஜய் டீவியில் 'துப்பாக்கி'! கிளைமாக்ஸ் - விஜய் வில்லனை சந்திக்கப்போகும் காட்சி.



நான் புத்திசாலித்தனமாய், "என்ன சம்பந்தமே இல்லாமல், முருகதாஸ் 'கண்டாங்கி, கண்டாங்கி' பாட்டை இங்க வச்சிருக்கார்?"

முறைத்துப்பார்த்த மனைவி,"நல்லா பாருங்க! இது சன் ம்யூசிக். ஜில்லா பட பாட்டு! விளம்பர இடைவெளியின் போது மாத்திட்டேன்"

* * * * * * * * *

சென்னை 'செல்ஃபி' மெட்ரோ



சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலானோர், 'செல்ஃபி புள்ள' !எடுத்துத்தள்ளிவிடுகிறார்கள்! அதில் ஒரு சிறுவன், ரயில் பெட்டிகளின் இன்டீரியரை மட்டும் வளைச்சு வளைச்சு எடுத்துக்கொண்டிருந்தான். எதிர்காலத்தில், ரயில் பெட்டிகளை டிசைன் டிசைனா செய்வான் போலிருக்கிறது!!!

ஒரு சமீபத்திய சர்வேயில், பெரும்பாலானோர் மெட்ரோவில் பயணம் செய்வது, பொழுதுபோக்கிற்காகவும் செல்ஃபிக்காகவும் தான்.

அட பக்கிபயலுவளா இதை தெரிஞ்சுக்கிறதுக்கு சர்வே எதுக்கு?

* * * * * * * * *

திகிலூட்டும் கேள்வி!

ஒரு உணவுப்பொருள் காலாவதியானால் என்ன செய்வோம்? தூக்கிப்போடுவோம், இல்லையா ! 

ஆனால், நாம் வழக்கமாக பொருட்கள் வாங்கும் சூப்பர் மார்க்கெட்-களில் அப்படி செய்யமாட்டார்கள். ரிட்டர்ன் கொடுத்துவிடுவார்கள். எதற்காக என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். ரிட்டர்ன் ஆன காலாவதியான உணவுப்பொருளை என்ன செய்வார்கள் என்பது உற்பத்தியாளர்களுக்குத்தான் வெளிச்சம்!



அப்புறம், இந்த பதப்படுத்திய உணவுகள்! சைவ அசைவ உணவு எதுவாகயிருந்தாலும் எவ்வளவு நாட்களானாலும் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி வைக்கமுடியும்.

30 வருடங்களுக்கு முன் பதப்படுத்திய Frozen Chicken-னை சமைத்து ஃப்ரேஷ்-ஆக பரிமாறமுடியும் என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?

* * * * * * * * *

காக்காமுட்டை - "எடுத்துக்கிறோம்!" என்பது சரியா?!!


காக்காமுட்டை படத்தில், திருடுவதை "எடுத்துக்கிறோம்" என்று சொல்வது சரியா???!! ரயில் ஃபுட்போர்டில் போகிறவர்களின் செல்போன்களை பறிப்பதும் "எடுத்துக்கொள்வதுதானே"! இப்படியே போனால், பெரிய பெரிய ஸ்கேம்(Scam)களில் மாட்டியவர்களின் மீதும் "பாவம் எடுத்துதானே கொண்டார்கள்" என்று பரிதாபம் உண்டாகிறது!

ஐயகோ என்ன இது ! என் மைன்டு அவனுக்கு ஃபிரெண்டு ஆகிடுச்சே ! 

* * * * * * *

சங்கதாரா.. புத்தகவிமர்சனமல்ல!!!



கரிகாலன் கொலை பற்றிய சிந்தனைகளை வேறொரு பரிமாணத்திற்க்கு இட்டுச்செல்கின்றது இந்த புதினம். தக்க சான்றுகளுடன் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறிப்பிட தவறவில்லை நாவலாசிரியர்.

இருப்பினும், அதி முக்கியமான இறுதி அத்தியாயங்களில் இடம்பெறும் தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்ற சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை..

மிக முக்கியமாக, ஆதித்யனை கொன்றவரைப் பற்றிய தகவல், இராஜராஜனின் பிறப்பு ரகசியம், உத்தமசோழன் உண்மையில் யார் என்ற விளக்கம், வந்தியத்தேவனின் உண்மையான நோக்கம் என்ன என்பது. சர்ச்சைகளையும் ஐயங்களையும் உருவாக்கும் இந்தப்பகுதிகளில் தான் சான்றுகள் இன்றி எழுதப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று விஷயங்களுக்கும் விடை தெரிந்தபின், ஒரு நிம்மதியின்மை தோன்றுகிறது. அதற்காகத்தான் கல்கி மறைத்தாரா ???!!!

* * * * * * *

இரண்டும் ஒன்றா?

”கண்ணுக்குள் பொத்திவைப்பேன்.. “



சாருலதாமணி, சாதனா சர்கம் - இவர்களின் குரல்களில் இனிமையான பாடல்! நஸ்ரியாவின் குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷன்கள் அருமை. வாண்டூஸ்க்கெல்லாம் பிடிக்கிற மாதிரி டான்ஸ் பொம்மைகள் ஆடைகள்!

சாதனா சர்கமே பாடியிருப்பதால் எனக்கு இன்னொரு பாடலும் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டும் ஒரே ராகமோ?

“ரகசியமாய்!”


* * * * * * *

நானொரு கவிஞன் ஒரு காலத்திலே!

மாணவர் பிராயத்தில் நிறைய கவிதைகள் எழுதுவேன். சிற்சில பரிசுகள், கல்லூரி காலம் வரை என்னை வளர்ந்து வரும் கவிஞனாக இட்டுச்சென்றன. அதற்குப்பின் ஏனோ தெரியவில்லை 'பற்றாத சட்டையை இழப்பது போல' கவிதை எழுதும் பழக்கம் என்னை விட்டுபோய்விட்டது.

ஏன் என ஆராய்ந்ததில் புரிந்தது - அழகிய மொழியில் ஆங்கில கலக்காமல் சாதாரணமாக எழுதுவதே தரமான கவிதை எழுதும் மகிழ்வை தந்ததாலேயே கவிதை எழுதிவரும் வழக்கத்தை இழந்திருக்கின்றேன்!


ஒரு கவிதை - கீழே (நல்லாயிருக்கா?)

* “கிளையினிலிருந்து
    உதிரும்
    பூக்களுக்காக
    வருந்துவதா..?
    அது என்மேல்
    உதிர்வதனால்
    மகிழ்வதா..?”


* * * * * * *

என்னம்மா இப்படி பண்றீங்களேமா ?

எந்த ஊடகங்களை திறந்தாலும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள். 'இதை சாப்பிடலாம், அதை சாப்பிடாதே' என்று ஆளாளுக்கு சொல்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் இயற்கை உணவுகளை பின்பற்றவும்  தொடங்கிவிட்டார்கள்!

எல்லோரும் இயற்கை உணவுகள் பக்கம் போய்விட்டால் என்ன செய்வது? அதனால் 'அக்கா மாலா' குளிர்பான நிறுவனம் என்ன செய்தார்கள் தெரியுமா ?

'(ஃப்ரெஷ்-ஆன) பழச்சாறுகளில், அதிக கலோரி! தங்கள் குளிர்பானத்தில் குறைவான கலோரிகள்தான் இருப்பதாக' கருத்துகணிப்புகள் சொல்வதாக வரிந்துகட்டிக்கொண்டு அவசர அவசரமாக ஊடகங்களில் வெளியிட்டார்கள்.

இந்த ஒப்பீடே தவறு போல தெரிகிறது! பழச்சாறுகளில் இருக்கும் நன்மை பயக்கும் எந்த வேதிப்பொருட்களும்  எந்த குளிர்பானங்களிலும் கிடையாது! அவை வெறும் 'சக்கரை தண்ணி'! ஒரு குளிர்பானத்தை இன்னொரு குளிர்பானத்தொடு வேண்டுமானால் ஒப்பிடலாம்!

http://slism.com/images-slider/fresh-fruit-juice-diet/fresh-fruit-juice-diet-02s.jpg

* * * * * * *

'ஜெர்மன் ஃபார்மிலா' !

சமீபகால விளம்பரங்களில் தங்கள் தயாரிப்புகள் 'ஜெர்மன் ஃபார்மிலா'வை(Formula-வாம்) பின்பற்றுவதாக சொல்கிறார்கள்.  'ஜெர்மன் ஃபார்மிலா(?!?!)' - உண்மையா இல்லையா? அந்த ஃபார்முலா தரும் கம்பெனி உண்மையா உப்புமாவா?  என்று யார் போய் பார்க்கப்போகிறார்கள்?

நல்ல/அத்தியாவசிய பொருட்கள் எதுவானாலும் பயன்படுத்துவதில் தப்பில்லை என்பது என் கருத்து! ஆனால், டம்பம் அடிக்கும், படிப்பதற்கே கடினமான குட்ட்ட்ட்ட்டி  டிஸ்கிளைமர்/வார்னிங் போடும் விளம்பரத் தயாரிப்புகள் மட்டும் கிலியை கிளப்புகிறது!


* * * * * * *

(மீண்டும் சந்திக்கலாம்!)

Saturday, February 1, 2014

எண்ணச்சிதறல்கள் - (02-02-2014 ஞாயிறு)

'ஹவுடினி டெக்னிக்' (Houdini Technique)  தெரியுமா?

க்கட்டான சூழ்நிலைகளிலிருந்து சாமர்த்தியமாக வெளிவர வெவ்வேறான யுக்திகளை ஹவ்டினி(Harry Houdini 1874 – 1926) கையாண்டார் என்பதை சில சுயமுன்னேற்ற நூல்களில் படித்து வைத்திருந்தேன். அவருடைய உத்திகள் அமானுஷ்யம் என்றும், மேஜிக் என்றும் காலம்காலமாக வேறுவேறு கருத்துக்கள் சொல்லப்பட்டுவருகின்றன. கடினமான சங்கிலிகளால் பிணைத்து, இரும்புப்பெட்டியில் பூட்டிவைத்து தண்ணீருக்குள் அவரை தூக்கியெறிந்துவிடுவார்கள். அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு வெளியே வந்துவிடுவார். மேம்போக்காக பார்த்தால், டிரிக் மாதிரிதான் தெரியும். ஆனால், அவர் ஒரு தேர்ந்த Escape Artist.


புத்தகக்காட்சியில் அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. பிணையிலிருந்து மீள்வதில் ஒவ்வொரு தரமும் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்..! கரணம் தப்பினால் மரணம்! வித்தை ஆரம்பிக்குமுன், அவரிடம் உதவியாளர் ஒரு ஊசியையோ அல்லது சின்ன கத்தியையோ யாரும் அறியாத வண்ணம் கொடுத்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். புத்தகத்தை முழுவதும் படித்தபின் மேலும் சில தகவல்கள் பகிர்கின்றேன்..

அடுத்த செய்தியும் இதோடு தொடர்புடையதுதான்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Escape Plan - 2013 (English Movie)

ரண்டு சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்கும்போது, பெரும்பாலும் 'அதான் ஸ்டார்கள் இருக்கிறார்களே, கல்லா கட்டிறலாம்' என்பது போன்ற அலட்சியம் கதையில் இருக்கும். தமிழில் மட்டுமில்லை ஆங்கிலப்படங்களிலும் உதாரணங்கள் உண்டு.

80 களின் சூப்பர்ஸ்டார்களான சில்வஸ்டர் மற்றும் ஆர்னால்ட் இணையும் இந்தப்படமும் அப்படித்தானா?

சில்வஸ்டர் ஒரு Escape expert. ஹவிடினி மாதிரிதான். சிறை அமைப்புகளில் இருக்கும் பாதுகாப்புக்குறைபாடுகளை கண்டறிந்து சொல்வதுதான் அவர் வேலை! இதற்காக, வெவ்வேறு பெயர்களில் கைதிமாதிரி சிறைகளில் தங்கும் நிலைகூட நேர்கிறது.

இவ்வாறு இருக்கும்போது, சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஆராய ஒரு பெரிய அசைன்மெண்ட் வருகிறது. சிறைக்கு சென்ற இடத்தில், இவர் இன்னார் என்று தெரிந்தும் நிஜமாகவே சிறைவைக்கப்படுகிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

ரசிகர்கள் ஏமாறாதீர்கள் - Action Portion கம்மி! சில்வஸ்டர் மற்றும் ஆர்னால்ட் வில்லன்களுக்கு ஒரு அடி விட்டால் விழுந்துவிடுவதால் ஆக்‌ஷனுக்கு அதிக வேலையில்லை. Escaping tricks என்ற சுவாரஸ்யத்தால் எனக்கு இந்தப்படம் பிடித்தது. அவைதான் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளும்!

இறுதிகாட்சியில், சிங்கம் மாதிரி பெரிய கன்-ஐ எடுத்து ஆர்னால்ட் சுடும் காட்சி படு அபாரம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Amazon Prime Air - ஏன் வெற்றிகரமானது இல்லை ? 

ண்பன், 3 இடியட்ஸ் படங்களில், Air Drone என்ற கருவி வரும். அதேமாதிரியான கருவிகளை கொண்டு, அமேசன்.காம் தங்கள் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தது. (விஜய், அமீர்கானிடம் அனுமதி வாங்கினீர்களா ??? ;) ) ஆனால், அதை நடைமுறைக்கு கொண்டுவரும் சிக்கல்கள் பற்றி இந்த வீடியோவில் சொல்கிறார்கள்.




* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண் மானே சங்கீதம் பாடிவா..

'காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக மாற்றவரும் பாடல். நாதகலா ஜ்யோதி இசைஞானி இளையராஜ்ஜா இசையில்,__________(?) இராகத்தில் எஸ்பிபி மற்றும் எஸ் ஜானகி குரலில் பெண் மானே சங்கீதம் பாடிவா..'
(யாழ் சுதாகர் சொல்வது மாதிரி படித்துக்கொள்ளவும் :))


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீண்டும் பார்க்கலாம்.. 

Saturday, May 26, 2012

அறிவுஜீவி பிராணிகள் !!! (2012-05-26 - சனி)

க்டோபஸ், ஆரூடம் பார்க்கும் என்றுதான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், அவற்றின் இரு முக்கியமான குணநலன்களுக்கு அறிவியல்மூலம் விடைகாண முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறுகிறார்கள். இந்த கட்டுரையின் முடிவில் ஒருவித வியப்புடன்தான் செல்வீர்கள் என்பதற்கு என்னால் உத்திரவாதம் அளிக்கமுடியும்!

ஆக்டோபஸ்களின் இந்த குணநலன்கள் இதே குடும்பத்தில்(தலைகாலிகள் அல்லது மெல்லுடலிகள் இனம்) உள்ள பிற பிராணிகளான கட்டில் ஃபிஷ் (Cuttlefish) மற்றும் ஸ்க்விட்டுகளுக்கும்(Squid) பொருந்தும்.

அந்த குணநலன்கள் எவை ??
# Camouflage : சமயத்திற்கு/சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன் மேற்தோல் வண்ணத்தை மாற்றிக்கொள்வது(Color/Pattern/Shape Changing): உடல் வண்ணமட்டுமில்லை மேற்தோல் பாறையில் இருந்தால் சொறசொறப்பாகவும், செடியில் இருந்தால் முட்கள் போலவும் மாற்றிக்கொள்கிறது. Shape Changing என்று சொல்லப்படுவது மிமிக் ஆக்டோபஸ் (Mimic octopus) போன்ற அரிதான சில வகை ஆக்டோபஸ்கள் பயன்படுத்தும் உத்தி. இந்த உருமாறும் குணத்தினாலோ என்னவோ, மிமிக் ஆக்டோபஸ் என்று உண்டென்று ரொம்ப சமீபத்தில்தான் தெரிந்திருக்கிறது.(1998 வருடம்).

(நகரும் பாறையிலிருந்து கடல்பாசியாக!!!)

# Intelligence : நுண்ணறிவு : மனிதனுக்கு இணையாகவோ அல்லது அதைவிட அதிகமான(!) நுண்ணறிவைக்கொண்டிருக்கின்றன ஆக்டோபஸ்கள். மனிதன், ஆபத்திலிருந்து தன்னை சமயோசிதமாக தற்காத்துக்கொள்வது மற்றும் தொலைநோக்குப்பார்வையுடன் செயல்படுவது ஆகிய திறன்களை தன் சமூகமாக இயங்கும் வழக்கத்திலிருந்து(Social) அல்லது முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறான். ஆனால், இந்தப்பிராணிகள் Non-Social Animals !!! முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் தாய்-தந்தை ஆக்டோபஸ்கள் இறந்துவிடுவதால், தனித்தனியாக வாழ்கின்றன. Cannibals வேறு என்பதால், ஒரு ஆக்டோபஸ் மற்றொரு ஆக்டோபஸிடமிருந்து மறைந்து வாழ்வது இன்றியமையாதது. அவைக்கொண்டிருக்கிற கலர்மாறும் குணமும், நுண்ணறிவும் பரிணாமத்தின் கட்டாயம்.


(நுண்ணறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் செயல் -  சோதனை!!!)

அவற்றின் நுண்ணறிவுக்கான மற்றொரு ஆராய்ச்சியில், இரண்டு கொட்டாங்குச்சிகளை(Coconut Shells) வெவ்வேறு இடத்தில் போட்டுவிடுகிறார்கள். ஆக்டோபஸ் இரண்டையும் ஒரு இடத்திற்கு எடுத்து வருகிறது(Foreseeing & Planning-கின் வெளிப்பாடு). பின் சிப்பிக்குள் அடைபடுவதைபோல தன்னை மூடிக்கொள்கிறது. இந்த தற்காப்பு உத்தியை தானாக சிப்பியிடமிருந்தோ(Shell) ஹெர்மிட் நண்டுகளிடமிருந்தோ(Hermit Crab) கற்றுக்கொள்கின்றன என சொல்லப்படுகிறது..  இதேபோல, மிமிக் வகை ஆக்டோபஸ்கள், பிராணிகள் போலவோ மீன்கள் போலவோ  உருமாறுகின்றன. இப்படி இவை எடுக்கும் உருவங்கள் 15க்கும் மேற்பட்டவை. ஒரு பிராணி தாக்கவரும்போது அந்தந்த பிராணிகளின் Predator கள் உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கிறது.. உதா.திற்கு, டேம்ஷெல்ஃபிஷ்(Damselfish) தன்னைத்தீண்டும்போது, அந்தமீன்களை உணவாகக்கொள்கின்ற(Predator) நீர்ப்பாம்புகள்போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அவற்றை மி(வி)ரட்டுகின்றன..

இவற்றை அடிப்படையாக வைத்து சில கேள்விகள் :

”கடன்காரப்பய.. எங்க போனான்னே தெரியலயே!!!
1) வண்ணம்மாற்றி தப்பிக்கமுடியும் என்பதை எப்போது யார் இவற்றுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்?

2)  மிமிக் ஆக்டோபஸ்களிடம் காணப்படுகின்ற சமயோசித உருவமாற்ற நுண்ணறிவை எவ்வாறு பெற்றன?? ஒவ்வொரு பிராணிகளின் Predator-கள் இவையென அவற்றுக்கு எப்படித்தெரிந்தது?

3) இப்பொழுது சொல்லப்போவதைக்கேட்டால் இன்னும் குழப்பமாக இருக்கும்! ஆக்டோபஸ்களுக்கு கண்கள் ஷார்ப். ஆனால், வண்ணங்கள் சுத்தமாக தெரியாது. எவ்வாறு சரியான வண்ணத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கின்றன? (விஞ்ஞானிகளின் சமீபகால அனுமானம் : ஆக்டோபஸ்களின் மேற்தோல்கள் “பார்க்கின்றன”!!)

உருமாறும் ஏலியன்கள் :

Color மற்றும் Pattern Changing-ல் கட்டில் ஃபிஷ், ஒரு ராஜா!! நம்ம வீட்டு வேலியோர பச்சோந்தியெல்லாம் இவற்றுக்குப்பிறகுதான்..   




கோழி ஓடுவதுமாதிரி இரண்டு கால்களால் உருமாறி ஓடிஒளிந்துகொள்ளும் ஒரு வீடியோ :

மேலும் பல வீடியோக்கள் :


கட்டில்ஃபிஷ்-களின் காதல் காலம்(HD) - தற்காப்பு, இணையை கவர்தல், இரையை பிடித்தல் ஆகியபோது மட்டுமில்லாமல் காரணகாரியமின்றி சாதாரண காலங்களில் உற்சாகமாக இருக்கும்போதும் உடல் வண்ணம் மாறுகிறது..
http://www.youtube.com/watch?v=v8Aw7QroV78&feature=relmfu


இவை ஏலியன்களா ??? : 3 இதயங்கள், 9 மூளைகள், 8 கைகள் !!!
http://www.youtube.com/watch?v=xAL0R5MbzdQ&feature=related

Maze -ல் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இரையை சுலப வழிகளில் கண்டறிவது - நுண்ணறிவு சோதனை
http://www.youtube.com/watch?v=bBe2KaRuI80&feature=fvsr

ஒரு கட்டில்ஃபிஷ், சிறிய ஆக்டோபஸ் ஒன்றினை லபக்குகின்றது:
http://www.youtube.com/watch?v=mGMT99i00M4

- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

இது என்ன படம்ங்க ???!!!

ரு படம் என்னவென்று தெரியவில்லை. நண்பர் சொன்ன கதையைக்கேட்டவுடன் அந்தப்படத்தைப்பார்க்கவோ,  அதனைப்பற்றித்தெரிந்துகொள்ளவோ ஆவல் :

’சிறுவனாக இருந்த வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போகிறான் ஒருத்தன்.  கடுமையாக உழைக்கிறான். எக்கச்சக்க பணம் சேர்க்கிறது. பல வருடங்களுக்குப்பிறகு, அவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறான். தன் வீட்டினரிடம் தான் இன்னார் என வெளிப்படுத்திக்கொள்ளாமல், விருந்தாளி போல தங்குகின்றான். விடிந்ததும் ’தான் யார்’ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுப்பதுதான் அவன் பிளான். விருந்தாளியாக வந்தவனிடம் ஏகப்பட்ட பணம் இருப்பது அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியவருகிறது.. பணத்திற்கு ஆசைப்பட்டு இரவோடு இரவாக அவனை கொலைசெய்துவிடுகிறார்கள் !!! படம் முடிகின்றது..’

- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

சினிமா - என்ன?ஏன்?எப்படி? (WWH)

* சந்தரமுகி படத்தில் ஜோதிகாவின் பிரச்சினை - ஆவியா? Split Personality-யா?

* தம்பி ராமையாவின் கஸ்டடியில் மைனாவை அனுப்பவதில்   என்ன பிரச்சினை? பிரச்சினை என்று தெரிந்தும் ஏன் இன்ஸ்பெக்டர் தன் வீட்டுக்கு கூட்டிப்போகவேண்டும்?

- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

மேஸ்ட்ரோ - Is Back !!!



- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

மீண்டும் சந்திப்போம் !!!

Saturday, April 7, 2012

எண்ணச்சிதறல்கள் ( 07-04-2012 சனி)

புது சர்ச்சை ??!!!


நன்றி : வீக்கிப்பீடியா
ல்கி அவர்களின் ’பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு தோன்றும் ஒரு பொதுவான கேள்வி - மாவீரனான ஆதித்யன் எவ்வாறு இறந்தான்? மதுரைக்கு சென்றிருந்தபோது துரோகிகளால் பாண்டிய ஆபத்துதவிகளால் கொலைசெய்யப்பட்டது போலத்தான் எழுதியிருப்பார் கல்கி! உண்மையில், சிற்றப்பா உத்தமசோழனின் அதிகாரிகள் தான் இளவரசன் ஆதித்யனை துரோகக்கொலை செய்தார்கள் என்கிறார் ஒரு பதிவர். ஏன் என்பதாக அவர் சொல்லும் எல்லாக்காரணங்களும் தீவிர ஆய்வுக்குரியவை!

ராஜராஜன் மன்னனாக முடிசூட்டிய காலத்திற்கு முன்னர் சுமார் முப்பதாண்டுகாலம் வரலாற்றுக்குறிப்புகள் குழப்பமாக, தெளிவாக இல்லை என்று கூறப்படுகின்றது(வீக்கி). சூழ்ச்சியால் ஆதித்யனின் மறைவு, சுந்தரச்சோழ மன்னர் காஞ்சிபுர அரண்மனையில் மாளிகைச்சிறை(?!) வைக்கப்பட்டது, உத்தமசோழன் பதவியேற்றுக்கொண்டது, சுந்தரசோழரின் மறைவு... இவற்றுக்குப்பிறகு என்ன ஆயிற்று என்பது தெளிவாக இல்லை. 

அந்த சமயங்களில்தான் நடந்ததாக பதிவர் சொல்ல வருவது - (1) ஆதித்யன் கொல்லப்பட்ட சில காலத்திலேயே வந்தியத்தேவனும் உத்தமசோழனின் படையினரால் கொல்லப்பட்டார். (Update: விவாதத்திற்குரிய பொருள்) (2) ஆதித்யன் மற்றும் சுந்தரசோழர் ஆகியோர் மறைவுக்குப்பின், ராஜராஜனும் அவரது அக்காள் குந்தவை நாச்சியாரும் உத்தமசோழனிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வந்துள்ளார்கள்.(3) குந்தவை வேறொரு மதத்திற்கு மாறியதாக கூறப்படுவது.

குந்தவை நாச்சியார், தான் சார்ந்திருந்த சமயத்தை புறந்தள்ளி வேறொரு சமயத்திற்கு மாறி ’சமயபுர’ட்சி செய்த இடம்மாம் - சமயபுரம் ! ஒரு சமயத்திலிருந்து மற்றொரு சமயத்திற்கு மாறினார் என்று சொல்லியே ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் இந்தப்பதிவர்!!!

இவர் விடுக்கும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என்பதனை யாராவது நடுநிலைமையான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினால் நல்லது.

அதே போல, கல்கியின் பொ.செல்வனிலும் - கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே! நந்தினியும் ஆழ்வார்க்கடியானும் மட்டும் கற்பனையல்ல.. கதைச்சம்பவங்கள் யாவும் கற்பனையோ என்று எண்ணத்தோன்றுகிறது...

இதனால் படித்த, பார்த்த மற்றும் கேட்டவைகளோடு, கற்ற விஷயங்களும்(!) ஆய்வுக்குரியதாகின்றன..

* * * * * * * * * * * * * *

என் கார்ட்டூன் பக்கம்

ன் டெலிபோன் இண்டர்வியூ வேண்டாம்?



* * * * * * * * * * * * * *

கார்ட்டூன் என்னது! ஆனா ஜோக் என்னதில்ல!!



டாக்டர்: ஆபரேஷன் முடிஞ்சதும் காலாட்டிக்கிட்டே தூங்குங்க.. இல்லைன்னா, மார்ச்சுவரிக்கு கொண்டுபோயிடுவாங்க!

பேஷண்ட் : ???!!!!

* * * * * * * * * * * * * *

மேகமே மேகமே - காப்பியா? 


ந்துஸ்தானி பாடகர் அமரர் ஜெகஜித் என்பவரின் பாடல் இன்ஸ்பிரேஷன் தான் - மேகமே மேகமே! சங்கர்-கணேஷ் அவர்களின் இசையில் வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரலில் வந்த மேகமே மேகமே கீழே -


சந்தரசேகரிடம் ”எனக்கொரு மலர் மாலை நீ வாங்கவேண்டும்” என்று பாடியபடி திரும்பும்போது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியை புன்னகையாக வெளிப்படுத்தவேண்டும் என்று டைரக்டர் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள் :))

* * * * * * * * * * * * * *

உலகின் பெரிய ஊஞ்சல்



* * * * * * * * * * * * * *

இந்த வார - வீடியோ சர்ஃபிங்:


வற்றில் ஒரு பாடல், கெளதமின் - நீதானே எந்தன் பொன்வசந்தந்தத்திற்கு, இசைஞானிதான் இசை என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் பார்த்தது.  இந்தப்பாடல்களை எல்லாம் யூட்யூபில் தேடியபோது கிடைத்த மற்றொரு அருமையான பாடல் தான் கடைசிப்பாடல். அந்தக்கால கேத்ரினா கைஃப் - ஆன, ரதியின்  உதட்டசைவுகள் வேடிக்கையாக இருக்கும்.

[பாடவந்ததோர் கானம்] - [இசை மேடையில்] - [நீதானே என் பொன்வசந்தம்] - [ஆயிரம் மலர்களே மலருங்கள்]

* * * * * * * * * * * * * *

யார் இவர்?

தேசத்தந்தையுடன் இருக்கும் இந்த வெள்ளைக்கார தாத்தா யார் என்று தெரிகிறதா??


சார்லி சாப்ளின்!!
 
காந்தியடிகள் 1931-ஆம் ஆண்டில் பிரிட்டன் சென்றிருந்தபோது ஏற்பட்ட சந்திப்பு!

* * * * * * * * * * * * * *

மீண்டும் பார்க்கலாம் !!!

Saturday, December 17, 2011

எண்ணச்சிதறல்கள் ( 06-01-2012 வெள்ளி)

போனவாரம் எம்.ஐ4 படம் பார்த்துவிட்டு, அதைப்பற்றி பதிவெழுதி பாக்கெட்டில்(draft) வைத்திருந்தேன். அடுத்து - ராஜப்பாட்டை படம்! டான்2 பார்க்கலாம் என்று யோசனை இருந்தது. பிறகு, விமர்சனங்கள் அந்த அளவுக்கு இல்லை என்றவுடன் பின்வாங்கினேன்.

நான் விமர்சனம் எழுதவில்லை என்று யாரும் அழவில்லை என்றாலும், எதாவது எழுதி ’இலக்கிய சிகாமணி’ ஆகியேவிடுவது என்ற குறிக்கோளுடன்.. (உங்கள் கண்களில் தெரிவது - கொலவெறியா? பயமா?)

எம்.ஐ4 - ஜேம்ஸ்பாண்ட் மாதிரி ஒரு படம்! ட்ரிபிள் எக்ஸ் என்றொரு உளவாளிப்பட வரிசைகளையும் இவர்கள் ஜேம்ஸ்பாண்ட்-ற்கு போட்டியாக அறிமுகப்படுத்தியாக ஞாபகம்! எதுவும் எடுபடவில்லை! ஜேம்ஸ் ராக்ஸ்!
இந்தப்படத்தின் விசேஷமாக சொல்லவேண்டுமென்றால், பர்ஜ் காலிஃபா மீது நடப்பது, இந்திய அட்ராக்‌ஷனுக்காக அனில் கபூர் மற்றும் சன் நெட்வொர்க்.. அந்த டிவிகளில் கொஞ்சமே கொஞ்சம் தெரியும் நம்ம வடிவேலுவும், மனோபாலாவும்! (வடிவேலு-’நாமளும் ஒரு உலகப்படத்துல நடிச்சிட்டோம்!!!’) துபாய் மற்றும் இந்திய நாடுகளின் அறிமுகக்காட்சிகள் - பிரமாதம்! சும்மா சொல்லக்கூடாது... ஹெலிகாப்டர் ஷாட்டில் பாலைவனம் அவ்வளவு அழகு!   இந்தியாவிற்கு படப்பிடிப்பிற்கு நிஜமாக வந்தார்களா என்பது சந்தேகம் !!! செட் எல்லாம் தத்ரூபம்! நல்லவேளை இந்தத்தடவை இந்தியா ஏழைநாடு இல்லை! அந்த ஹோலோகிராம் சீனும் பிடித்தது..

ராஜப்பாட்டை -  ஒருவிக்ரம், ஒரு சுசீந்திரன், இருவரும் சேர்ந்தால் எப்படி படம் தரலாம்??!!! அந்த எதிர்ப்பார்ப்போடு போனால்?!! சேது, காசி, தெய்வதிருமகள் வரிசையிலுமில்லாமல், தில், தூள் வரிசையிலுமில்லாமல், இந்தப்பாட்டை தனி வழியாக இருக்கிறது ..

‘என்னுடைய படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் இது.. கே.விஸ்வநாத் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமை!’ என்று இயக்குனர் சுசீந்திரன் பெருமைப்பட்டிருந்தார். கே.விஸ்வநாத் அவர்களுக்கு ஏன் இப்படியொரு பாத்திரம் என்பது தெரியவில்லை. ’இந்தப்படம் எனக்கும் தீனியில்லை, விக்ரமிற்கும் தீனியில்லை’ என்பதெல்லாம் சரி; பார்க்கிறவர்களுக்காவது ’தீவணம்’ போட்டிருக்கலாமில்லையா..!!!

”படத்தில் சிறந்த - “ என்று ஒன்று ஏதாவது இருக்கணுமில்லையா, அது சிறப்பான பைட் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு! கொஞ்சம் கொஞ்சம் காமெடிக்காட்சிகள்! ஹீரோவின் காதலியிடம் செல்போன் இருப்பது தெரியாமல் கடத்துவது லாஜிக் மிஸ்ஸிங்கா, இல்லை காமெடியா? என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன்!

அண்மைக்கால அப்டேட் : ராஜப்பாட்டை இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது இங்கே!

* * * * * * * * * * * * * *
வைரல் வீடியோஸ்

* னுஷ் பற்றிய அடுத்த செய்தி வந்துவிட்ட நிலையில், கொலவெறி பழைய செய்தி! யூட்யூப்.காம் தனுஷ்-க்கு தங்க விருதையும்(இதுவும் பழைய செய்தி!), சிம்பு-க்கு வெண்கல விருதையும் தந்திருக்கிறார்கள். என்னது ஏனா? அவ்வளவு பேரு வேலவெட்டியில்லாம வீடியோ பார்த்திருக்கோம்!!! கோடி ஹிட்ஸ்கள் கொடுக்கிறோம், நமக்கொரு வெஞ்சனக்கிண்ணம் கூட கிடையாது !!! ம்ஹூம்!!!



ள்ளூரில் தான் வைரல் வீடியோ புதுசு! இணையத்தில், யூட்யூபில், தினம்தினம் யாராவது எதாவதொரு வீடியோ பதிவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதோ இந்த வீடியோவில் உள்ள பெண்ணுக்கு வயது - 14! ஊர் : சிட்னி -ஆஸ். நம்மூரில் பாட்டுக்கு ’வாயசை’ப்பார்கள். இவர் புருவம் அசைக்கிறார். ஒரு இரண்டு மூன்று தரம் திரும்பத்திரும்ப பார்த்தால், ஒரு அமானுஷ்ய கேள்வி மனதுக்குள் தோன்றிமறைகிறது ஏனோ ??



டிப்படையில், எல்லா வகையான ஓவியங்களிலும் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆசை. அழகான தஞ்சாவூர் ஓவியம் உட்பட! இது ஒரு விளம்பரப்படம் - ரொம்ப கிரியேட்டிவ் ஆக இருக்கிறது! எவ்வளவு நாளில் எடுத்திருப்பார்கள்??


* * * * * * * * * * * * * *
தென்றல் - தொலைக்காட்சித்தொடர்


ப்படியெப்படியோ போய்க்கொண்டிருக்கிறது கதை... வழக்கம்போல வசனங்கள் பக்கா! பின்னணியிசையும் பாராட்டத்தக்கது.. தகுந்த நேரத்தில் தகுந்த இசை அல்லது ஹம்மிங்! யார்னே தெரியல! புவி அண்ணன், ரித்தீஷ் அப்பா,துளசி அப்பா,எஸ்.என்.லட்சுமி பாட்டி - தவிர மற்றவர்கள் எல்லோரும் வில்லன்கள் -  ஹீரோ உட்பட(???!!!). ’எனக்கும் சீரியலில் சான்ஸ் தாருங்கள்’ என்று கேட்கிறவர்களுக்கெல்லாம் டைரக்டர் வில்லன் ரோல் கொடுத்துவிடுவார் என்று நினைக்கிறேன் !



* * * * * * * * * * * * * *

யார் ஒரிஜினல்??
ஸ்வாகத்-தில் சாப்பிடும்போதெல்லாம் “நீலே நீலே அம்பர்” என்கிற இந்திப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். கேட்பதற்கு அப்படியே - இளையராஜா-SPB யின் “இளைய நிலா.. பொழிகிறது”.

எது ஒரிஜினல்? எது காப்பி? தமிழ்தான் ஒரிஜினல்(1982), இந்திப்பாடல் 1983ல் உருவானது என்று ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார். நகல்தான் என்றாலும் சும்மா இல்லை. பிரபல கிஷோர்குமார் பாடிய அதில் வயலின் பிட் ஒன்று வரும் பாருங்கள்.  படக்காட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது தற்செயல்போல இல்லை!!!




* * * * * * * * * * * * * *
வீடியோ சர்ஃபிங் (V-Surfing)

ரு அமைதியான மாலைநேரத்தில், எல்லா பாடல்களின் விடியோக்களை இரண்டு இரண்டு வரிகள் ஓடவிட்டு கேட்டபிறகு கடைசியில் மிகவும் பிடித்த ஒருமுழுபாடலில் முடிப்பது - இதுதான் என்னுடைய தற்போதைய  பொழுதுபோக்கு!

இந்தவார வீ.சர்ஃபிங் பாடல்கள் - அதே வரிசையில்!

முதலில், ”தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒண்ணு..”, அடுத்தடுத்து - “என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்”, ”அடிப்பூங்குயிலே”, “ராசாவே ஒண்ண விடமாட்டேன்”, கடைசியில் முழுப்பாடல் - “சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி..”

தென்றல் காற்றே..] - [ என்னைத்தொட்டு..] - [அடிப்பூங்குயிலே] - [ராசாவே] - [சந்தைக்கு]


 * * * * * * * * * * * * * *

மீண்டும் பார்க்கலாம் !!!

Friday, November 18, 2011

எண்ணச்சிதறல்கள் ( 01-12-2011 வெள்ளி)


இதயம் பேத்துகிறது!

வஹர் சார் தலைப்பு இங்கு ஏன்? ப்ளாக்கர் செட்டிங்கில் புதுமையாக புகுத்துகிறேன் பேர்வழி என்று எதோ செய்யப்போய், தளத்தையே ஒரு வாரமாகக்காணோம்! தளத்தை மீட்டெடுத்தது வரை ஒரே தவிப்பு - அதான் இந்த தலைப்பு!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீடியாக்கள்!
டந்த ஒரு வருடமாக முதல்பக்கங்களில் வைத்து போற்றப்பட்ட செய்தி! அபி-ஐஸ்க்கு குழந்தை பிறக்கப்போவது. அதைக்கூட விட்டுவிட்டார்கள். பிறகு, பிக் பாஸில் ஒரு வெளிநாட்டு கவர்ச்சி மங்கை இணைந்ததை பெரிய செய்தியாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதுபோய், பால்,பெட்ரோல் விலையேற்றம், பேஸ்புக்கில் ’கொலைவெறி’யோடு ’கொலவெறி’,பவார்-அறை, திகார்-சிறை, மழை, நிவாரண உதவி அப்புறம் இடையிடையே மானே தேனே பொன்மானே... - ’செய்தியோடை’ என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஓடியேபோய்விடுகின்றது...


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Why this Kolaveri Kolaveri Di?



வீக்கிப்பீடியாவில்  தனிப்பக்கமே உருவாக்கிவிட்டார்கள். யூட்யூபில், இதுவரை 1 கோடியே 30 லட்சம் ஹிட்ஸ்கள்! தனுஷ்க்கு ’போதையில்’ இருப்பதுபோல பாடுவது தண்ணீர் ப(போ)ட்ட பாடு! அவரின் முதல் பாடல் ”நாட்டுச்சரக்கு நச்சுனுதான் இருக்கு”, பிறகு “ஒம்மேல ஆசதான்”, ”கொலவெறி” எல்லாமே போதைப்பாடல்கள்தான்..


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கத்தார் - சில துளிகள்

* கத்தார் நாட்டில், பதினைந்து, இருபது வருடங்களாக குடும்பத்துடன் செட்டிலான தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மலையாளிகள். ஆர்ம்ஸ்ட்ராங் முதன்முதலில் நிலாவுக்கு போகும்போது, அங்கே ஒரு நாயர்  - ஏற்கனவே - டீக்கடை போட்டிருந்தாராம்! சும்மாவா இந்த ஜோக்கை சொல்லியிருப்பானுங்க!! வாடகைவீடு தேடிக்கொண்டிருக்கிறோம். கேரள ஏஜெண்ட்கள் பேசும் தமிழ் மிகச்சிரிப்பாக இருக்கும்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை!) - “அல் துமாம்மாவில் ஒரி டபுள் பெட்ரூம் இரிகி. நஜ்மாவிலே சிங்கில் இரிகி...” இந்த ரேஞ்சுக்கு தமிழ் பேசுகிறார்கள்! நான் நினைத்துக்கொண்டேன் - “அகில உலகத்திலும் தமிழ் வாழ்ந்துகொண்டு இரிகி!” (கத்தார் நண்பர்கள் யாராவது டோஹாவில் வீடு வாடகைக்கு இருந்தா சொல்லுங்களேன்..! வீடு கிடைப்பது ரொம்ப சிரமமாக இருக்கிறது..:( )

* KUBOOS : தென்னிந்திய உணவகங்களும் இருக்கின்றன. நாங்கள் அடிக்கடி சாப்பிடுவது - பாரத் (எ) வசந்த பவன். கேரள ரெஸ்டாரண்ட்களில், மோட்டா, பாரிக், பாஸ்மதி மூன்றும் உண்டு. அரபிக் க்யுசின்களில், குபூஸ் என்ற ஐட்டத்தை இலவசமாக தருகிறார்கள். அவசியம் சேர்த்து வாங்கவேண்டிய தந்தூரி ஐட்டங்கள் மட்டும் காசுக்கு! இந்த குபூஸ் (குஷ்பூ, குஷ்பூனு படிச்சீங்கன்னா என் தப்பு இல்லீங்க), மைதா + கொஞ்சம் கோதுமையில் செய்யப்படுகிறதாம். தினம் தினம் சாப்பிட்டால், பெரிய ஆளாக - சைசில் - வருவீர்கள்  !! அவ்வளவு கலோரிஸ்! சரியான டயட்-டை பின்பற்ற விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு அல்ல குபூஸ்! அடிக்கடி வளைகுடாக்களுக்கு  விசிட் அடிக்கும் நண்பர்களுக்கு இது தெரிந்து இருக்கும். சொந்த ஊர் வரும்போது, ’வேறு ஆள்’ போன்று தோற்றமளிக்க சரக்கு மட்டுமில்லை.. இந்த குபூஸூம் ஒரு காரணம்!

* துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன்,ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் பழைய காலங்களில் -  1959 க்கு முன்பு - புழக்கத்தில் இருந்த பணம் - இந்திய ரூபாய்கள்!!  பிறகு, கிபி 1966 வாக்கில் இந்தியாவே அவர்களுக்கென்று அறிமுகம் செய்த பணம் - வளைகூடா ரூபாய். அந்த சமயங்களில், ஒரு இங்கிலாந்து பவுண்ட் நாணயத்தின் மதிப்பு, ரூ. 13.50 இந்திய ரூபாயாம் (ம்ஹூம் .. !!!). ரூபாய் மதிப்பு, குறைய குறைய வளைகுடா நாடுகள் ரூபாயை கைவிட்டு, தத்தம் கரன்ஸிகளை உருவாக்கவேண்டியிருந்தது. ஆரம்பத்தில், அந்த நாடுகளின் கரன்ஸிகள், ரூபாய்களுக்கு சமமான மதிப்பைக்கொண்டிருந்தன.

* ளைகுடா நாடுகளிலேயே முதன்முதலாக, கிபி 2022 வில், FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கப்போவதால், மொத்த கத்தாரும் புதுக்கோலம் போடத்தயாராக இருக்கிறது. துபாய் அளவுக்கு கட்டுமானத்துறையில் புகழ்பெறுவதற்காக பழைய கட்டிடங்களெல்லாம் இடிபடுகின்றது. சிங்கார டோஹா, சிங்கார வாக்ரா(ஹ்) எல்லாம் பார்க்கலாம் - கூடிய விரைவில்!

* தோ சொல்வார்கள் - ‘எள்ளு எண்ணையில வேகுது, ’......................’, எதுக்கு வேகுது??’. சென்னையில கடும்மழை, சாலைகளில் தண்ணீர் சரி.. எழில் வெயில் கொஞ்சும் பாலைவன கத்தாரில், அடைமழையும் சாலை தண்ணீர்த்தேங்கலும் இருந்தால் என்னவென்று சொல்வது?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

”நண்பன்”

வைரஸாக சத்யராஜ், சரியான தேர்வு. சரி, சைலன்ஸர் யார்? என்று ஆவலாக இருந்தது.. அதற்கு, சத்யன்! கொஞ்சம் சவாலான பாத்திரமாக இருக்கும் அவருக்கு(சாம்பிள் கீழே!). நிஜ ‘சைலன்ஸருக்கு’ ஹிந்தி தெரியாதாம். அந்த அப்பாவித்தனம் கூட அந்த காரெக்டருக்கு வெற்றியைத்தந்தது!

எனக்கொரு கேள்வி.., எல்லோரும் பார்த்துவிட்ட படத்தை ரீமேக்கி என்ன செய்யப்போகிறார்கள்??!!



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
”தில்லானா மோகனாம்பாள்” - கிடைக்கறியா ஒரு ஆவணப்படம்



திருமணத்திற்குப்பிறகு திருமதி.பத்மினி அவர்கள் நடித்த முதல்படம் என்று சொல்லப்பட்டது. இந்தக்காலத்து, சைஸ் ஜீரோ, சிக்ஸ் பேக்ஸ்-ஸோடு ஒப்பிட்டப்பார்க்கமுடியாது என்றாலும், இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பும் க்ளாஸ், இல்லையா!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

சலங்கையிட்டால் ஒரு மாது...!



விஜய டி. ராஜேந்தர் இயக்கி நடித்த இந்தப்படத்தில் தான் முதன்முதலாக அமலா அறிமுகமானார். டி.ஆர். தான் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் கூட! ஏனோ தானோ என்றெல்லாம் இல்லை! ஆகா ஓகோ!! உதாரணத்திற்கு, இந்தப்பாடல் இசைஞானியையே திரும்பிப்பார்க்கவைத்திருக்கும் என்று நினைக்கத்தோன்றுகிறது. பாடல் வரிகள் மட்டும் எப்படியாம் - ??? 

"தடாகத்தில் மீன் ரெண்டு, காமத்தில் தடுமாறி தாமரை பூமீது விழுந்தனவோ, இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ???!!”

Hats Off to you TR Sir!!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மீண்டும் சந்திப்போம்!!!

Tuesday, August 9, 2011

எண்ணச்சிதறல்கள் (2011-11-16)

இந்தப்பதிவு - எனக்கு ’இரண்டு முதல்’கள்

1) கத்தார் - நாட்டிலிருந்து இந்த பதிவு!
2) என் புது லேப்டாப்பில் இருந்தும்!
-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-


DUNE BASHING





ஒரு Sand Dune சிகரத்திலிருந்து தோன்றும் காட்சி. 
இங்கு தெரியும் நீர் வளாகம் சுமார் 100-150 அடிக்குக்கீழே!
(படங்களை பெரிதாக்கக்காண கிளிக்கவும்)

கத்தாரில், பாலைவன சஃபாரி (Desert Safari) என்று ஒரு நாள் போனோம். Sand Dunes-களில் புல்லரிக்கும் Dune Bashing! மணல் சிகரங்களில் பிறழ முயலும் அந்தத் தருணங்களில் சுதாரிப்பாக திருப்பி ஓட்டவேண்டும். தவறினால், உச்சியில் இருந்து குட்டிக்கரணம்தான். திறமையான ஓட்டுனர் -  நாங்கள் மண் கவ்விவிடாமல் ஓட்டினார். தனியாக உருண்டால் அடிபடாது - வண்டியோடு உருண்டால்? நல்லதொரு ட்யூன் பேஷிங் வீடியோ இங்கே!







என் போன் காமராவிலிருந்து காரின் காலடி!
(படங்களை பெரிதாக்கக்காண கிளிக்கவும்) 


-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

டேப்ளட் கணினி புரட்சி (Aakash Tab - Rs.2999/-)

போட்டி போட்டுக்கொண்டு நான் நீ என்று ஆம்லேட் மாதிரி டேப்ளட் வெளியிடுகிறார்கள். ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகியவற்றின் ஆதிக்கத்தால், ஜாம்பவான் நோக்கியாவும் தங்கள் பதிப்பு டேப்பை அறிவிக்க வேண்டியிருக்கிறது. குறைந்த விலை ‘ஆகாஷ்’, ஒரு பெரிய புரட்சி என்று சொல்லப்படுகிறது. காசுக்கேற்ற தோசை என்றும் சொல்கிறார்கள். ஆகாஷ் டேப்பை முன் பதிவு செய்யலாம் இங்கே :
 
http://www.aakashdatawind.com/


-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

ப(பி)டித்த புத்தகம்

நானோடெக்னாலஜி - சுஜாதா!


’நானோவை முழுவதும் புரிந்துகொள்ள முயல்வது, கடவுளின் அருகே நம்மை இட்டுச்செல்லும்’ போன்ற சுஜாதா அவர்களின் எழுத்துப்பிரயோகம் பிரமிக்க வைக்கிறது. 

40 பக்கமுள்ள இந்த சிறியப்புத்தகத்தில், மாலிக்யூல் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்ப அறிமுகங்களும் கிடைக்கின்றது. மனிதன் தானே வளர்வதுபோல், தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் எதிர்கால கம்ப்யூட்டர்கள் - எப்படி கேட்கவே சிலிர்ப்பாக இல்லை?

சுஜாதா-வின் புத்தகத்திற்கு விளம்பரம் தேவையில்லை! உயிர்மை பதிப்பகத்தில் தேடினால் இந்தப்புத்தகம் கிடைக்கிறது!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-


இனி சமீபத்தில் நான் வரைந்த கார்ட்டூன்களின் அணிவகுப்பு.

சிக்வே பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். ஒரு ஐடி நிறுவனத்தில், Cost-cutting-கிற்கு முன்னேயும் பின்னேயும்! 



-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-


இதற்கு விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன் !!!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

ஆ.. இந்த விளம்பரங்கள்..

திரைப்படம் என்றில்லாமல் சில நொடிகள் தோன்றும் விளம்பரங்களும் நல்ல களமாகி வருகின்றன புது இயக்குனர்களுக்கு!

* TOI-சென்னைப்பதிப்பு விளம்பரத்தில் தூங்கிக்கொண்டே இருக்கிறார் ஒருத்தர். போரடிக்கும் நாளிதழிலிருந்து, சுவாரஸ்யமான நாளிதழுக்கு மாறுங்கள் என்பதை சொல்வதாக இருக்கிறது. ’ஏற்கனவே உள்ள நாளிதழ்கள் ஒவ்வொருத்தரையும் சம்பவங்களின் இடத்திற்கே கொண்டு செல்கின்றன, ஆனால் நாம்தான் தூங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்றும் புரிந்துகொள்ளலாமா? இது அந்த விளம்பரத்திற்கு வெற்றியா?

* எதிர்மறையான பயத்தை ஏற்படுத்தி காப்பீட்டு விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று விதியே இருக்கிறது. ஆனாலும், சாலை விபத்து பயம் ஏற்படுத்துகிறது ஒரு விளம்பரம்!

* Facebook-ல் கிடைத்த விளம்பரத்தில். குழந்தைகளின் கலாச்சாரமும் போச்சா? என்று கேள்வி கேட்க முடியாது!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

ரிலாக்ஸ் - புதுப்பாடல்!  உருமி!

-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-

மீண்டும் சந்திப்போம்... : )

Thursday, April 28, 2011

எண்ணச்சிதறல்கள் - 29/04/2011 (வெள்ளி)

Yahoo News!

ழுதுவது அவ்வளவு சுலபமானதாகயில்லை! அதனால்தான் படிக்கத்துவங்கிவிட்டேன். தற்போதைக்கெல்லாம் அதிகம் படிப்பது - யாஹூ செய்திகள். வட இந்திய முக்கியஸ்தர்கள், சினிமாக்காரர்களின் வாழ்க்கைமுறைகளை(Lifestyle) பற்றிய செய்தி மட்டும் தந்தவர்கள், உருப்படியாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள், தங்கம், வெள்ளி மற்றும் ETF  போன்ற முதலீட்டு ஆலோசனைகள், உடல்நலம் மற்றும் டயட் முதலான கட்டுரைகள் என சக்கைப்போடு போடுகின்றார்கள்.. அண்மையில், எனக்கு ரொம்பப்பிடித்தது தலைப்பு - இந்தியாவில் பணவீக்கம் எவ்வாறு நிகழ்கிறது? என்று கணித விளக்கங்களோடு வெளியிட்டிருந்தார்கள்!

(Sid, Dippy, Sallu, Kat, Karuna - இவையெல்லாம் என்ன ? - விஐபிகளுக்கு யாஹூ இட்ட செல்லப்பெயர்கள் !  கடைசிப்பெயர் நமக்கு பரிச்சியமானதுதான் - முதல்வர் கருணாநிதி! மற்றவர்கள் - சித்தார்த் மல்லையா, தீபிகா படுகோன், சல்மான்கான்,கேத்ரினா கைப்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

தென்றல் (சன் டிவி)!

துவரை மெகா தொடர் என்று எதையும் பார்த்ததில்லை.. விழுதுகள்(முதல் மெகா) மட்டும் பார்த்திருக்கிறேன் ஒரு சஸ்பென்ஸூக்காக (”யார் பெரியவரின் வாரிசு?”) அதற்கு அடுத்து இப்பொழுது தென்றல்!

வழக்கமான  மெகா தொடரின் ஃபார்முலாக்கள்  எவற்றுக்கும் குறைவில்லாத தொடர்தான் தென்றலும்! தொடர் முடிந்தபாடில்லை, ஆனால் வில்லிகள் மட்டும் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள் - தமிழ்-ன் அம்மா, துளசியின் சித்தி, அதற்குப்பின் சாரு, அப்பப்போ தமிழ்-ன் தங்கை, இப்பொழுது சுந்தரி(யுவராணி கேரக்டர்), மற்றும் ஐஸ்வர்யா கேரக்டர். இன்னும் யார்யார் எல்லாம் வில்லியாகப்போகிறார்களோ!

ஐஸ்வர்யா தான் துளசியின் அம்மா என்று எங்கள் வீட்டு உளவாளிகள்(!!!) சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் !

தகவல் பெறும் சட்டத்தில் எதையாவது கேட்டால், அந்த தகவல் எங்களிடம் இல்லை என்கிற காலம் இது! குறைந்த பட்சம் இசை யாரென த.பெ.ச. மூலம் கேட்டுச்சொல்வார்களா?   (வசனம் : விகடன் புகழ் எழில்வரதன்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நூல் அறிமுகம் : திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)

கையில் சிறு சிறு புத்தகங்களை வைத்திருப்பது எப்பொழுதும் நலம்! பயணங்களிலும் மற்றும் காத்திருத்தலின் போதும் போரடித்தால், படிப்பதற்கு! புத்தகக்காட்சிகளில் எக்கச்சக்கமாக நான் அள்ளுவது, சிறிய நூல்களைத்தான்! செல்போனில் MP3 புத்தகங்களாயிருந்தால் (Audio Books) இன்னும் வசதி! கிழக்கு பதிப்பகம் போன்றோர் இவ்வாறு வெளியிடுகிறார்கள்!  சரி இதை இங்கேயே விட்டுவிடுவோம்! (ரொம்ப ’வழவழ’க்கிறேன் இல்ல??!!)

திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)  - இது ஒரு பழைய நூலின் மறுபதிப்பு (அலைகள் வெளியீட்டகம்; விலை:40) திருக்குறள் தெளிவுரை நூல்கள் இருக்கிற எல்லா நூலகங்களிலும் கட்டாயம் இருக்கவேண்டிய நூல் இது.

இருப்பதிலேயே சிறந்ததாக கருதப்படும் பரிமேலழகரின் குறள் தெளிவுரையிலும் சில குறள்கள், ஆசிரியரின் தமது மனப்போக்கின்படி தவறாக பொருளுரை எழுதப்பட்டனவாம். கவனிக்கவும்: மிகச்சில குறள்களே! எவை அவை? ஏன்? அதன் உண்மையான பொருள் யாது என்பதனை ஆசிரியர் நாமக்கல் கவிஞர், ’திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954)’ என்ற ஆராய்ச்சி கட்டுரையின் மூலம் வெளியிடுகிறார்.

தலைப்புக்காரணம் ?? தான் சொல்ல வந்த கருத்தை புரிந்துகொள்ளாமல், வேறு கருத்தை பின்பற்றுகிறார்களே என்று வள்ளுவர் காதில் கேட்டால் அதிர்வாராம்!

சிறப்பான சில நூல்கள், படிப்பவர்களுக்கு எதையும் தனியாக சொல்லாமல், தானே உணர்ந்துகொள்ளுமாறு ஒரு தகவலை கொண்டிருக்கும். இந்த நூலிலும் அப்படி ஒன்று உண்டு. அது - ’அதிகாரத்தின் ஒரு குறளை மட்டும் தனியாக அர்த்தம் கொள்ளாமல், ஒரு அதிகாரத்தையே மொத்தமாக படித்து, சிந்தித்து, மொத்தமாக புரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்’ - என்பது! வாய்மை எனப்படுவது எப்பொழுதும் உண்மையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதல்ல, உண்மை வலிதரும் என்றால் தீங்கிழைக்காத பொய் சொல்வதும் வாய்மைதான் என்பது முழு அதிகாரம் படித்தால்தானே புரிகிறது!

வாழ்க்கையில்,எத்தனையோ சமயங்களில் பின்பற்ற நினைக்கும் அல்லது அவ்வப்போது மேற்கோள்களுக்காகவாவது நாம் பயன்படுத்தும் குறள்களை நாம் சரியாக புரிந்துவைத்திருக்கிறோமா என்ற சுயகேள்வியை கேட்கவைக்கின்றது இந்த நூல்.

குறிப்பாக, அறத்துப்பால் குறள்கள் யாவும் ஒரு நாடாளும் மன்னனுக்கு மட்டும் சொல்லப்பட்ட விஷயங்களல்ல! நவீன காலத்தில் அரசர்கள் எங்கேயிருக்கிறார்கள்? அரசனாக வள்ளுவர் உருவகப்படுத்துவது - ஒவ்வொரு குடும்பத்தலைவனையும்! என நூலாசிரியர் கூறுகிறார். அதாவது, இரண்டாயிரம் வருடங்களாக தன்னடக்கமாக இருக்கும் - Complete Personality Development Course!

இந்த நூலின் ஆசிரியர் - "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கு ஒரு குணமுண்டு" என்று முழங்கிய நாமக்கல் கவிஞர். கவிஞரின் சரிதையை படித்தபோது, உப்பு சத்தியாக்கிரகப்போராட்டத்தில் (ஒரு வருடம்) சிறையிலிருந்த சமயம் எழுதிய திருக்குறள் தெளிவுரை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அது இதுதானா என்பது ஒரு சந்தேகம்.

தன் உடல்நிலையை மேம்படுத்திக்கொள்வதற்காக சிறையில் கொடுக்கப்பட்ட காசை, திருக்குறள் நூல்கள் வாங்குவதற்கும் அதற்கு தெளிவுரை எழுதுவதற்காகவும் செலவு செய்தாராம் கவிஞர்.

கிடைக்குமிடம்
அலைகள் வெளியீட்டகம்,
4/9, 4ம் முதன்மைச்சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
சென்னை-600 024.
விலை : ரூ.40/-

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பறவைகளின் V-Formation



காலமாற்றங்களின் போது வெகுதூரங்களுக்கு செல்லும் பறவைகள் எவ்வாறு சோர்வில்லாமல் பறக்கின்றன? -

இதற்கு விடை :  பறக்கும்பொழுது அவை எடுத்துக்கொள்ளும் ‘வி’ வடிவம். ஒரு பறவையை பின் தொடர்ந்து பறக்கும் மற்ற எல்லா பறவைகளுக்கும் அதிக கடினமின்றி பறக்கமுடிகின்றது.

தலைமைப்பறவைக்கு மட்டும் காற்றோடு எதிர்நீச்சல். பின்னால் மற்றும் பக்கவாட்டில் பறக்கும் பறவைகளுக்கு வேலைப்பளு அதிகம் இல்லை. தலைவர் பறவை, சோர்வடையும்போது விளிம்பில் உள்ள பறவை தலைமையேற்றுக்கொண்டு முன்னே பறக்கும்! இப்படி பறப்பதனால், 70% அதிகமான தூரத்தை கடக்கின்றனவாம். இதெல்லாம் யார் இவற்றுக்கு சொல்லிக்கொடுத்தது??!!

இந்த பறக்கும்முறையைத்தான் போர் விமானங்களில் பயன்படுத்துகிறார்கள்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Vehicles மற்றும் Robots

ந்திரன் படத்தில் விஞ். வசிகரன், ஆராய்ச்சியாளர்களின் ஒப்புதல் வாங்குவதற்கு முன்னேயே தனது ரோபோவை வெள்ளோட்டம் பார்ப்பார். யோசித்துப்பார்த்தால், அது மிகவும் திகிலூட்டக்கூடிய விஷயமாகப்படும்!

நம்முடன் எப்பொழுதும் ஒரு Semi-Robot வாக இருப்பவை நமது வாகனங்களே! அதை ஓட்டுவதற்கே, எத்தனை சாலை விதிகள், ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் (சரிசரி மீறினால்தான் விபத்தாகிறதே!) . இப்படி இருக்கின்றபோது, எதிர்காலத்தில், ரோபோக்களை தக்கவிதத்தில் முறையாக தயாரிப்பதற்காக கம்பெனிக்காரர்களும் மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்காக அதன் பயனாளரும்  சரியான உரிமம் பெறவேண்டியதிருக்கும்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

திறந்த மூலத்தகவல்கள் (Open Data)

திறந்த நிரலிகளுடன் மென்பொருட்கள் தருவது மாதிரி, சில நிறுவனங்கள் தங்களது டேட்டாவை பயனாளர்களுக்கு பயன்படும் வகையில் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். உலக வங்கி,RBI,தேர்தல் ஆணையம்(ஹைய்யா!) முதலான பெரிய பொது நிறுவனங்களும் இதில் அடக்கம்! ஆனால் உங்கள் ஆசைக்காக ஸ்விஸ் வங்கித்தகவல்களெல்லாம் கிடைக்காது!

என்னுடைய அடிப்படையான அலுவலக வேலையே - மெட்ரிக்ஸ் தான். அதாவது, நிறைய தகவல்களை Raw Data வாக பல ஊடகங்களில் தருவார்கள். அவற்றை எங்கள் டேட்டாபேஸில் தரவிறக்கிக்கொண்டு, SQLல் குவரியோ இல்லை ஸ்டோர்ட் ப்ரொஸீஜரோ எழுதி, வேண்டிய ரிப்போர்ட்களை உருவாக்கி அனுப்புவோம். ரிப்போர்ட் என்றால் இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் மெய்மைகளும் விளக்கங்களும் (facts and figures) இடம்பெறுமாறு, தற்போதைய அல்லது எதிர்கால வணிகப்போக்கை புரிந்துகொள்ளும் வகையில் தயார் செய்வது!  தகவல்களே இல்லையென்றால்? ரிப்போர்ட் இல்லை!

Open Data - வால் என்ன நன்மை? 
ஒரு குறிப்பிட்ட இலக்கோடு முயற்சியில் இறங்கும் ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள் போன்றவர்கள்  தகவல்களுக்காக அலைந்து நோகாமல் ’அந்தத்தகவல்களை நாங்கள் தருகிறோம் நீங்கள் அதனை பயன்படுத்தி ஏதாவதொரு கண்டுபிடிப்புகள் கொண்டுவாருங்கள்’  என்றோ அல்லது சிலசமயம் அந்த எதிர்பார்ப்புகளுமின்றி அல்லது ஆட்சேபணைகளுமின்றி பொதுத்தகவல்களை வெளியிடுகின்றார்கள். அவர்களுக்கு, அதனை வைத்து Business and Financial Risk Analysis போன்றவற்றை சுயமாக ஆராய்ந்து சொல்லும் உபகரணங்களை கண்டுபிடித்து மட்டும் கொடுத்தால், கோயில் கட்டி கும்பிடுவார்கள்!

கல்லூரி இறுதி மாணவர்கள் ப்ரொஜக்ட்டுகளுக்காக அலைவார்கள். அவர்களுக்கும் இது பயனுள்ளதாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.

கீழே உள்ள இணைப்புகள் இன்னும் சொல்லும்: 
http://www.thehindu.com/sci-tech/internet/article425608.ece
http://www.hindu.com/biz/2011/03/28/stories/2011032856261600.htm

'டெட் (TED)' டில் வீடியோ

http://www.ted.com/talks/tim_berners_lee_the_year_open_data_went_worldwide.html

எந்தத்துறையின் ஓப்பன் டேட்டா வேண்டும்? கிடைக்கும் இந்த இணைப்பில்:
http://www.researchpipeline.com/mediawiki/index.php?title=Main_Page

நிரலிகளுக்கு புரியக்கூடிய வகையில் தகவல்களை மாற்றி தரும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு : http://www.opencivic.in/

ஓப்பன் டேட்டாவை அடிப்படையாக வைத்து சில போட்டிகள் - தக்க பரிசுகளுண்டு!


உலக வங்கி:   http://appsfordevelopment.challengepost.com/
ஒரு கல்வி மற்றும் சேவை நிறுவனம்:  http://www.donorschoose.org/hacking-education

* * * * * * * * * (மீண்டும் சந்திப்போம்!) * * * * * * * *

Tuesday, November 2, 2010

Cartooning - வரைய ஆரம்பிக்கின்றேன்!

பெரிய அளவில், ஓவியப்போட்டிகளில் வெற்றிபெறாவிட்டாலும் கேலிச்சித்திரங்கள் வரைவதில் மட்டும் ஒரு ஆர்வம் உண்டு எனக்கு! Just ஒரு Hobbyist! அவ்ளோதான்!

புதிதாக வாங்கிய பென்-டேப்ளட்டில் சில கார்ட்டூன்கள் வரைந்துபார்த்தேன்... நல்லாயிருக்கா???

இனி என் பதிவுகளில் சில கார்ட்டூன்கள் எட்டிப்பார்க்கும்.. :)


கீழே உள்ளது - Self Caricature!!! ஹி.. ஹி.. ஹி..


உங்கள் பதிவுகளுக்கும் கேலிச்சித்திரங்கள் மற்றும் கார்ட்டூன்கள் வேண்டுமா?

பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் கேலிச்சித்திரங்கள் வரைய ஆர்வமாக இருக்கிறேன். இலவசமாகத்தாங்க! கவிதை மற்றும் சில சிறுகதை வகைகள் தவிர்த்து மற்ற அனைத்து வகைப்பதிவுகளுக்கும் கார்ட்டூன்கள் வரைய முடியும்! விருப்பம் உள்ளவர்கள் கீழ்குறித்த மின்னஞ்சலில் என்னை அணுகவும்..

cartoonmyhobby(at)gmail(dot)com

Monday, November 1, 2010

எண்ணச்சிதறல்கள் ... (02/11/2010)

ரே விஷயத்தைப்பற்றி நிறைய எழுதுவதைவிட, சில  விஷயங்களைப்பற்றி குறுந்தகவல்களாக குறிப்பிடுவது சுலபமாக இருக்கிறது. குறைந்த நேரத்தில் நிறைய தகவல்கள் பகிர்ந்துகொள்வதும் சுவாரஸியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


பூக்கள் பூக்கும் தருணம்

னது வயதுக்கும் மீறிய படைப்பை தந்திருக்கும் G.V.பிரகாஷ், எட்டுக்கும் மேற்பட்ட ராகங்களை இந்த பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்! தனது வாழ்நாளுக்கும் பெருமை தரும் இந்தப்பாடலை தந்தவர், இன்னும் சிறப்பான பாடல்களை தரவேண்டும் - வாழ்த்துக்கள். பூக்கள் பூக்கும் தருணம் ரசிக்க இங்கே கிளிக்கவும்... 


மதராசப்பட்டினம் படமும், பக்கா! சமீபத்தில் வந்த மிக சிறந்த படங்களில் ஒன்று எனலாம்! டைட்டானிக், லகான் - ன் சாயல் என்று வெறுமனே சொல்லிவிடுவது, இந்த படத்திற்கு நாம் செய்யும் அவமரியாதை என்று படுகிறது.. இளைய எமி மட்டுமில்லை.. வயதான எமியாக வரும் கமல்-சாயல்-பாட்டியின் கம்பீரமான நடிப்பும் பிடித்திருந்தது..

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


கமலும் சர்ச்சையும்

விஜய் டிவி, காபி வித் அனு-வின் ப்ரமோவில் இன்று, கமல், பக்தி பற்றிய சர்ச்சையான தன் கருத்தைக்குறிப்பிடுகிறார், அதுவும் தன் அண்ணன் மகளை வைத்துக்கொண்டு! சும்மா இருக்கமாட்டாரே..

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


டண் டணா டண்..

ன் டாரக்ட் விளம்பரத்தில், டாக்டர் ட்யூனிங் போர்கை தட்டி காதில் வைக்கவும், ‘டூஊஊஊஊஊ’ என்ற அவர் சொல்வது, வேடிக்கையாக இருக்கின்றது :))

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


பழைய பாடல்கள் - புதிய குரல்கள் !


யூட்யூபில் காணக்கிடைக்கும் இந்த வீடியோக்களில் இவர்கள் பாடும் பழைய பாடல்களில், இனிமை மாறாமல் இருப்பதற்கு முக்கியக்காரணம் - இசைஞானி!

என்ன சத்தம் இந்த நேரம்...
கரோகி, வீடு முழுதும் ஸ்பீக்கர்கள், மைக்கில் பாடல் - என இவர் பண்ணும் அமர்க்களம் ரசிக்க வைக்கின்றது.. அக்கம்பக்கத்தவர்கள் ஒன்று சொல்லவில்லையா? இந்த தந்தை-மகள் போலவே, நானும் என் மகளுக்கு  நல்ல Friend-ஆக இருக்கவேண்டும் என்பது என் மனைவி ஆசை! எனக்கு முக்கியமாக பாட வராது! நான் தாலாட்டு பாடி, என் (இரண்டு வயது) மகள் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டது, ஒரு Discouraging -ஆன நிகழ்வு  ;( அவரவர்க்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்போலிருக்கிறது :)) காணொளி மற்றும் பாடலைக்கேட்க இங்கே கிளிக்கவும்!!!

குழலூதும் கண்ணனுக்கு..
வேகமாக பாடுவதும், சில டெக்னிக்கல் தவறுகள் இருப்பதும் குறையாக தெரியாது! காணொளி மற்றும் பாடலை கேட்க இங்கே கிளிக்கவும்!

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


எந்திரன் - சிட்டி


  டப்பிடிப்பு முடிந்ததும், எந்திரன் சிட்டியை, Stan Winston Studios-வுக்கே தந்துவிடவேண்டும் என்பது ஒப்பந்தமாம்! அதன்படியே இப்பொழுது, டெர்மினேட்டர் ஆர்னால்ட் ரோபோவுக்கு அருகில் நம் சிட்டியும்! (நன்றி : குமுதம்). இங்கே அருகே சிட்டி வேற -  
தீபாவளி நல்வாழ்த்துக்களுக்காக!!!

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-

Sunday, October 10, 2010

3=4 என்பது தப்புக்கணக்கா?

நான் பாட்டுக்கு செவனேன்னுதானே இருந்தேன் !!!

3=4 என்பது மாதிரி ஒரு தப்புக்(கஷ்டக்)கணக்கை கொடுத்து, என்னையும் சிந்திக்க வைத்தான் என் குழு நண்பன்.

அப்புறம் என்னாச்சு? தோல்வியை ஒப்புக்கொண்டு, கேண்டீனில் குழிப்பணியாரம் ஸ்பான்சர் செய்யவேண்டியதாகிவிட்டது! ;(

அதெல்லாம் சரி..

3=3 சரி
4=4 ஓகே
எப்படி 3=4 ஆகும் ?

இதோ இப்படித்தான்...

படம்  1.

விளக்கம்
1)   -12  என்ற எண்ணை  (9-21) மற்றும் (16-28) என்று இரு விதமாக எழுதலாம்.
2)  இரு பக்கமும் (49/4) என்ற பின்னத்தால் கூட்டுகிறேன்.
3)  ஒரு வசதிக்காக, 21=(2x3x7/2) என்றும், 28=(2x4x7/2) என்றும் குறிப்பிடுகிறேன்.
4) அது ஒரு குறிப்பிட்டிருக்கின்ற சமன்பாட்டினை ஒத்திருப்பதால், அடுத்த வரியில்,  அந்த சமன்பாட்டை பயன்படுத்துகிறேன்.
5) இரு பக்கமும், Square root எடுக்கிறேன்.
6) இரு பக்கமும் (7/2) -வை தவிர்த்தால், விடை...

அட ஆமாம்!!!

Thursday, October 7, 2010

எந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்!


ற்கனவே கதை ஊகங்கள் மற்றும் விமர்சனங்கள் என நிறைய பேர் பதிவிட்டு ஓய்ந்தபின், இப்பொழுது வந்து ஏன் இந்தப்பதிவு என்றால், படத்தில் சொல்லப்பட்ட ரோபோட்டிக்ஸ், என் கவனத்தை ஈர்த்ததுதான்! நான் பட்டப்படிப்பு(2000) படிக்கும்போது, ஐசக் அசிமோவின் ரோபோ விதிகள் மனப்பாடம்!

படத்தைப்பற்றி -

(+) முதன்முதலாக, தமிழில் அறிவியல் படம். (நன்றி:சுஜாதா மற்றும் ஷங்கர்).
(+) ரஜினியின் உழைப்பு & நடிப்பு(சிட்டி)
(+) ஐஸ் டான்ஸ்
(+) ஏ.ஆர்.ரஹ்மானின் இசை
(+) கிராபிக்ஸ்



சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்
 


* சோதனையோட்டத்தில்(Beta) இருக்கும் சிட்டியை எப்படி பொது இடங்களுக்கு அனுமதியில்லாமல் அழைத்துவரலாம்?


* ரோபோ வில்லன், மிரட்டலாக இருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் சாயலை தவிர்த்திருக்கலாம். ரஜினிக்கு வில்லன் ரோல் பொருத்தம் என்று ஒரு பதிவர் சொல்லியிருந்தார். அது முற்றிலும் சரி!
  
* சீ-யை ரோபோ கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கும் காட்சி. அந்த இடங்களில் ரஜினி(சிட்டி)யின் நடிப்பு பிரமாதம். “இப்பொ என் கையாலே நீ சாகப்போறே!” என்று மிரட்டும் அந்தக்காட்சி படத்தில் ஹைலைட்! ”நண்பேன்டா!!!” மாதிரி புகழ் பெறக்கூடும். அந்த இடத்தில் பயமுறித்திருக்கவேண்டிய இசை பிடித்திருந்ததாலும் பயமுறுத்தவில்லை! ஏதோ சிம்பொனி மாதிரியிருக்கிறது!



* ரு ரோபோ இன்னொரு ரோபோவை தன்னிச்சையாக உருவாக்கமுடியுமா? Worst Case-ல், அத்தனை ரோபோக்களின் உருவாக்கத்திற்கும் வேண்டிய அடிப்படை பொருட்கள் - சர்க்யூட்கள் முதல் இரும்பு வரை - எங்கே எப்படி அதற்கு கிடைத்தது? Software - ஐ, காப்பி-பேஸ்ட் செய்யலாம். Hardware- ஐ காப்பி-பேஸ்ட் பண்ணமுடியாதில்லையா? அப்படியே உருவாக்கினாலும், எல்லா ரோபோக்களும் சமதிறன்களுடன் தானே இருக்கவேண்டும். தலைமை ரோபோ தவிர மற்றவை எல்லாம் ஆட்டுமந்தை போல சாதுவாக இருக்கிறதே! தங்களுக்குள் ஒரு மனிதன் இருப்பதை, தலைவன் மட்டும் தான் கண்டுபிடிக்கமுடியுமா?


Highly equipped -  என சொல்லப்படுகின்ற ரோபோக்களுக்கு மனிதனின் நடமாட்டம் தெரியவில்லையா!

* சீயின் தாடி வில்லன் வளாகத்தில் இருக்கும்போது வளரவே வளராதா? தினம்தினம் ஷேவ் செய்ய வீட்டுக்குபோகிறார் என்றால், செக்யூரிட்டி ஆக்ஸஸ் பிரச்சினையை எப்படி சரிகட்டமுடிந்தது?


* ணவே தேவைப்படாத இடத்தில் ஏன் ஃபிரிட்ஜ், கிச்சன் எல்லாம்! ”யாருமே இல்லாத கடையில...”! ஐஸ்-ஐ கடத்தி வந்தால் தேவைப்படுமென்று முன்கூட்டியே அங்கேயே இருந்ததா?


* ரோபோ-க்களுக்கு, மின்திறன் குறையும்பொழுதெல்லாம், வழியில் உள்ள மின்சாரப்பெட்டியில் இருந்தோ காரிலிருக்கும் பெட்ரோல்லிருந்தோ சார்ஜ் ஏற்றிக்கொள்வது, நல்லாயில்லைங்க!


* ரோபோக்களை அழிக்கும்போது, வெறும் கட்டளைகளை மட்டும் அழித்தாலே போதுமானது. கைகால் தலையை வெட்டிவிட்டால் உயிர்(!) போகாது!


* ரோபோ-க்கள் அறிவிலி! அறிவூட்டம் செய்வதற்கும் முன், ரஜினி, “என்னை குத்துனு சொன்னா குத்திடுவியா?”,”முட்டாள்.. ஒரு போர்வையை சுத்திக்கிட்டு வரத்தெரியாது?” என்று கேட்கும் இடங்கள் லாஜிக் ஓட்டைகள்.

* ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் அமைப்பது கடினம்! மனித உடலில் ஹார்மோன்கள் பயணமே அல்லது ஹார்மோன்களால் நிகழும் மாற்றமே - உணர்ச்சிகள்.


* ரு ரோபோவே பல்லாயிரக்காண பலத்தைக்கொண்டிக்கையில், ஏன் ஆயிரம் ரோபோக்கள் விதவிதமான ஜியாமெட்ரி வடிவங்களெல்லாம் செய்து, சண்டையிட வேண்டும்? கிராபிக்ஸ் பிரமாதமானாலும், நீண்ட நேர கிளைமாக்ஸ், களைப்பாகிறது!


* நீச்சலை -  படித்தல் என்பது வேறு! கற்றல் என்பது வேறு! ஒரு புத்தகத்தை படித்ததனால் மட்டுமே எப்படி ஒரு பிரசவம் பார்க்க இயலும்?

* ’மாற்றான் மனைவியை காதலிக்க முற்படும் ரோபோ’ என்ற ஒருவரி கதைக்களனை ரொம்ப பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள். சுமார் 10 வருடங்களாக அடைகாத்த கதை. அதை அந்த சமயத்திலேயே எடுத்திருந்திருக்கலாமோ? இன்னும் பிச்சு உதறியிருக்கும்! எல்லாமே ரோபோடிக்ஸ்களின் பழைய கருத்துருக்கள்! முடிவில், ’ரோபோடிக்ஸ் படிப்பிற்கு நிறைய ஸ்கோப் உண்டு’ என்பது வேடிக்கையாக இருக்கிறது! (சுமார் பத்து வருடங்களுக்கு முன், அப்படி ஒரு தோற்றம் இருந்தது.)


* Mrs. Doubtfire (1993)-ன் பாதிப்பு கொஞ்சம் அவ்வை சண்முகியில் இருந்தால், Bicentennial Man (1999)-ன் சாயல் எந்திரனில்! இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை - ஃபிளப்பர் ஹீரோ - ராபின் வில்லியம்ஸ்!

NOTE:  மேலேயுள்ளவை எந்திரன் கார்ட்டூன்-நான் வரைந்தது! (நல்லாயிருக்கா?)

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...